Saturday, July 7, 2007

உணவா ? எரிபொருளா ?

இன்று எல்லா ஊடகங்களிலும் பரவலாக புவி வெப்பம், சுற்றுப்புற சூழல் மாசுபாடு, பயோ-டீசல் என்று விவாதம் தொடர் கதையாக உள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் நடந்த சண்டைகளில் அதிகம் பெட்ரொலிய எரிசக்திக்கு நடந்தவையே. பெட்ரொலிய எரிசக்தி குறைந்து வருவதும், வாகன உற்பத்தி அதிகரித்து வருவதும், க்யோட்டோ (Kyoto)ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதும் வளர்ந்த நாடுகளை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. உண்மையில் வளர்ந்த நாடுகள் தங்களின் பெட்ரொலிய எரிசக்திப் பயன்பாட்டின் அளவைக் குறைத்துக் கொள்வதற்கு பதிலாக பயோ-டீசல், பயோ எத்தனால் என்ற மாயையைத் தோற்றுவித்து சுகம் பெறுகின்றன. வளரும் நாடுகளோ இந்த தாவர எரிசக்தியை ஏற்றுமதிக்குரிய சந்தைப்பொருளாக பாவித்து ஆர்வம் காட்டிவருகின்றன. வளர்ந்த நாடுகள் விவசாயத்துக்கு அதிக மானியம் தந்து தங்களின் விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாத்து உணவு உற்பத்தியில் தன்னிறைவும் உபரியும் இருக்கும்படி பார்த்துக்கொண்டு வளரும் நாடுகளில் மானியம் தருவதையும் தடுத்து உணவுப் பற்றாக்குறை ஏற்படும்போது அந்த வளர்ந்த நாடுகளை எதிர்பார்த்து வாழ வேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்துகின்றன. வளரும் நாடுகளில் காடுகளின் அழிவு காரணமாய் மழையின்மை,வேலையாட்கள் பற்றாக்குறை, சந்தைபடுத்துவதில் சிக்கல், பெருவணிக குழுமங்களின் சில்லறை வணிகம், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல், நிலமதிப்பு உயர்வு,உள்நாட்டு போர் என விவசாயம் சிக்கலில் உள்ளபோது மேலும் சிக்கலை கொண்டு வருவதுதான் இந்த பயோ-டீசல், பயோ எத்தனால் உற்பத்தி.

அருகே உள்ள தகவல் உண்மையை கூறும்.கடந்த 15 ஆண்டுகளில் ஆப்பிக்கா 64 மில்லியன் ஹெக்டர்,தென் அமெரிக்கா 59 மில்லியன் ஹெக்டர் பரப்பு காடுகளை இழந்திருந்தால் கடந்த 200 ஆண்டுகளில் வளர்ந்த நாடுகள் எந்த அளவிற்கு அவைகளின் வளத்தை சுரண்டி அவர்களின் வாழ்கையை பாழடித்துள்ளது என்பதை மனதை பிழியும் கீழேயுள்ள படங்கள் கூறும். நாம் எதில் கவனம் செலுத்தப்போகறோம்? உணவா ? எரிபொருளா ?
நாம் பெட்ரொலிய எரிசக்திப் பயன்பாட்டின் அளவைக் குறைத்து காடுகளின் பரப்பை அதிகரித்து மழைநீர் பெற்று சிக்கனமாக பயன்படுத்தி தேவையான அளவிற்கு பயோ-டீசல், பயோ எத்தனால் உற்பத்தி செய்யது உணவுற்பத்தியில் தன்னிறைவு அடைவதில் அதிக கவனம் செலுத்துவோம். அதை விட்டு எரிபொருளுக்கு அதிக கவனம் செலுத்தினால் விழைவு மோசமாக இருக்கும்.

No comments: