Friday, July 10, 2009

உணவுப் பாதுகாப்பை பாதிக்கும் பருவமழை

மேற்குத் தொடர்ச்சி மலைபகுதியில் 17-06-09 அன்று எடுக்கப்பட்ட படம். பொதுவாக தென்மேற்கு பருவ மழை தொடங்கி நன்கு அடைமழை பெய்ய வேண்டிய காலம். ஆனால் கறுத்த மேகங்கள் கூட இல்லாமல் மெலிதான வெண்மேகங்கள் மட்டுமே காணப்பட்டது.

பருவமழை தாமதமாக வருவதால் நாட்டின் உணவுப் பாதுகாப்பில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அரசே வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பருவமழை தாமதமாகிறது என்றவுடன் போதிய அளவு நெல், கோதுமை மற்றும் பருப்பு வகைகளின் இருப்பு கைவசம் உள்ளது என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் கூறியிருந்தார். ஆனால் பயிரிடுவதில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் அடுத்த ஆண்டு இத்தகைய கையிருப்பை வைத்துக் கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அரசே வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின்படி, 38.14 லட்சம் ஹெக்டேர் நிலத்தில்தான் நெல் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட 13.66 லட்சம் ஹெக்டேர் நிலம் குறைவாகவே பயிரிடப்பட்டுள்ளது. எண்ணெய் விதைகளின் விதைப்பு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. கடந்த ஆண்டு விதைத்ததில் 50 சதவீதம்தான் தற்போது செய்யப்பட்டுள்ளது. ஜூன் 10 ஆம் தேதி வரவேண்டிய பருவமழை, 25 ஆம் தேதிக்குப் பிறகே வந்ததால் விதைப்பது இனிமேல்தான் அதிகரிக்கும் என்று மத்திய அரசு விவசாயத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் பயிரிடுவதன் அளவு குறைந்தால் சுமார் 20 லட்சம் டன் நெல் விளைச்சல் குறையும். இந்தியாவில் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக இரண்டு டன்கள் நெல் உற்பத்தியாகிறது. பிரச்சனை நெல்லோடு நின்றுவிடவில்லை. பருப்பு வகைகள், பருத்தி ஆகியவற்றைப் பயிரிடுவதிலும் சிக்கல் நீடிக்கிறது. கடந்த ஆண்டு பயிரிடப்பட்டதைவிட 30 சதவீதம் குறைவான நிலத்திலேயே பருப்பு வகைகள் இதுவரை பயிரிடப்பட்டுள்ளன. பருத்தி விதைத்தல் திருப்தியை அளித்தாலும் போதிய மழை பெய்யாவிட்டால் விளைச்சலைப் பாதிக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.விவசாய ஆராய்ச்சிக்கான இந்தியக் கவுன்சிலின் விஞ்ஞானிகள் கூறுகையில், ஒரிசா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தரம் மேம்படுத்தப்பட்ட உரங்களைக் கொண்டு நிலைமையை சமாளித்திருக்கலாம். ஆனால் அத்தகைய ஏற்பாடு எதுவும் செய்யப்படவில்லை என்கிறார்கள்.
நன்றி :தீக்கதிர் 10-07-2009 கோவை.

No comments: