Saturday, November 28, 2009

வேருக்காக வெட்டிவேர் வளர்ப்பு

எனக்கு வரும் தொலைபேசி அழைப்புக்கள், மின்னஞ்சல்கள் 99% வெட்டி வேரை தனி பயிராக வளர்த்தால் (வேருக்காக) லாபம் கிடைக்குமா? எவ்வளவு வருமானம் ? எத்தனை நாட்களில் ? யாரிடம் விற்பது ? என்பது பற்றித்தான் இருக்கும். பொதுவாக வளர்ச்சி நன்றாக இருப்பினும் மண்ணின் தன்மை, நீர் ஆகியவற்றைப் பொறுத்து வேரின் நீளமும் அதன் அடர்த்தியும் இருக்கும். எனவே தோண்டி எடுப்பதற்கு நிறைய ஆட்கூலியாகும். தவிர மண்ணின் தன்மையைப் பொறுத்து வேர்கள் அறுந்துவிடாமல் எடுக்க வேண்டும். சோதனைக்காக பெரிய பையில் வளர்த்த வெட்டி வேர்.
மிக எளிமையான முறையில் வேருக்காக வளர்க்க பெரிய பைகளில் வளர்த்த பின்பு பையை அகற்றி வேரை மிக எளிதாக அறுவடை செய்யலாம். தற்சமயம் மிக குறைந்த விலையில் கிடைக்கும் அரிசி மற்றும் சிமென்ட் சாக்குப் பைகளில் வளர்த்தலாம். நல்ல வாசனையுடன் தரமாக இருக்க 1 முதல் 11/2 வருடங்கள் ஆகும். எங்கு வேண்டுமானலும் வளர்க்கலாம் குறிப்பாக மொட்டை மாடிக்களில் அதிக சூரிய ஒளியும், சமயலறை நீர் மறு உபயோகத்திற்கு கிடைப்பதாலும், அதிகமாக கரிம நிலைபாட்டில் ( Carbon sequestration ) உதவுவதால் நகரங்களில் வளர்க்க மிகவும் ஏற்றது. மிக கொஞ்சமாக மண், தேங்காய்மஞ்சு (மிக குறைந்த Ec < 1 அளவில்), சம அளவு மண் புழு உரம், வேம் இவற்றை கலந்து பைகளில் நிரப்பி 3 அல்லது 4 சிம்புகளை அல்லது நெட்பாட் நாற்றுக்களை வைக்க நமது வேருக்காக வெட்டிவேர் வளர்ப்பு ஆரம்பமாகிவிட்டது எனலாம். தேங்காய்மஞ்சு இருப்பதால் அதிகநாட்கள் நீரை தக்க வைத்துக்கொள்ளும். அதிக நீர் இருந்தாலும் பிரச்சனை இல்லை. வேம் வேரின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். மண் புழு உரம் செடிகளுக்கு நல்ல வளர்ச்சியை தரும். முதல் தரமான வேரினை அறுவடை செய்யலாம்.முயற்சி செய்யுங்கள். முயற்சி திருவினையாக்கும்.

Saturday, November 14, 2009

மலைகளும் மழைக்காடுகளும்.

இயற்கையை எவ்வளவு கொடூரமாக அழிக்கமுடியுமோ அந்த அளவிற்கு அழித்து விட்டோம். மலைகள் மரங்களுடன் இருந்தால்தான் மனிதன் அமைதியாக வாழமுடியும் இதில் குறைவு ஏற்படும் போது மனிதனுக்கும் மிருகங்களுக்குமிடையே (குறிப்பாக மனிதன் யானை) பிரச்சனைகள் உண்டாகின்றன. இதில் அதிகமாக யானைகளும், அரியவகை தாவரங்களும் அழிந்து போவதுதான் வருத்ததிற்குரியது. மலைகள் மரங்களுடன் இருந்தால் மழை நிச்சயம் உண்டு. உணவும் நீரும் இருந்தால் மனித மிருக பிரச்சனைகள் குறையும். மரங்கள் இயற்கையாக தன்னைத் தானே எவ்வளவு எளிதாக புதிப்பித்து கொள்ளுகிறது என்பதை தனக்கே உரிய அனிமேஷன் படம் மூலம் நமக்கு தெளிவுபடுத்துகிறார் திரு. ப்ராசிட்பொன்.


நமது ஆயிரக்கணக்கான ஏக்கர் மழைக்காடுகளை தேயிலை மற்றும் காப்பித் தோட்டங்களாக மாற்றிவிட்டோம். குறைந்த பட்சம் இருக்கின்ற மலைப் பகுதிகளிலாவது மரங்களை வளர்ப்போம்.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண். குறள் : 742.

Wednesday, November 11, 2009

இயற்கையின் சீற்றம் - நீலகிரி மாவட்டம்.

இயற்கை கண் இமைத்தால் கூட போதும் மனித இனம் துவண்டுவிடுகிறது. சுனாமிகளும், புயல்களும், நில நடுக்கங்களும், சென்ற 10 ஆண்டுகளில் மிக அதிகமாகி வருவது கவலை அளிக்கிறது. இந்த இடர்களும் உலகமயமாகிவிட்டது என்பதை மறந்து இன்னமும் பொருளாதாரத்தின் உச்சியில் இருக்கும் நாடுகள் இந்த சுழல் மாறுபாட்டை உணர மறுத்து செயல்படாமல் லாப நஷ்ட கணக்கையும், போட்டி மனப்பான்மையுடன் மற்ற நாடுகளை குறை கூறுவதும், நிர்பந்தம் செய்வதும் வருகின்ற சமுதாயதிற்கு நாம் செய்யும் துரோகம் என்பதில் ஐயமில்லை.

பார்க்கும் பொழுதெல்லாம் மனதை கவரும் “கேத்தி பள்ளதாக்கு” இந்த வருட வடகிழக்கு பருவ மழையில் மண் சரிவினால் மக்களுக்கு பெரும் துன்பத்தை தந்துள்ளது. நீலகிரி மாவட்டமே சோகத்திலுள்ளது. தமிழகத்தில் குறிபிட்ட இடத்தில் 24 மணி நேரத்தில் பெய்த அதிகபட்ச மழை கேத்தியில் பதிவான 820mm என பத்திரிகைகள் கூறுகின்றன. 10 கி.மீ தள்ளியுள்ள உதகை 190mm, குன்னூர் 310mm கோத்தகிரி 270mm, என்ற அளவில் மழை பெய்துள்ளது. தமிழகத்தின் சராசரி வருட மழையளவு சுமார் 950+ mm என்பதை மனதில் கொள்ளவும்.

இயற்கை தென்இந்தியாவிற்கு தந்த பரிசான வெட்டிவேர் இந்த பாதிப்பை கணிசமான அளவிற்கு நிச்சயம் குறைத்திருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. உலகிலுள்ள அனைத்து மக்களும் இதனை “வெட்டிவேர்” என்ற தமிழ் பெயரில்தான் அழைக்கிறார்கள் என்பது வியப்பளிக்கலாம். உலகில் 100 நாடுகளுக்கு மேல் பல்வேறு காரணங்களுக்கு வெட்டிவேரை பயன்படுத்தினாலும் மண் அரிப்புக்கு நம் தென்இந்திய வெட்டிவேரைத்தான் அனைவரும் பயன்படுத்துகிறார்கள் என்பது நமக்கு பெருமைதான். இந்த புல்லிற்காக வலையமைப்பை ( http://www.vetiver.org/ )உருவாக்க பொருளுதவி தந்து ஊக்கம் அளிப்பது தாய்லாந்து நாட்டின் மன்னர் குடும்பம். ஆனால் அதனைப் பற்றி நாமே தெரிந்து கொள்ளாமல், பயன்படுத்தாமல், பேரிடர் வரும் போது கஷ்டப்படுவது யார் குற்றம்? அலசி ஆராய்வதை விடுத்து ஆக்கப் பூர்வமாக செயல்படுத்தினால் வருங்காலத்திலாவது இழப்புக்கள் தவிர்க்கப்படும்.

எனது 2007 ஆண்டு பதிவினைக் காண :
மண் அரிப்பும் வெட்டி வேரும்
தா(வரம்) ஒன்று பயன்கள் பல.

ஓர் வேண்டுகோள்.
இந்த வலைப்பதிவை படிப்பவர்கள் உங்கள் நண்பர் ஓருவருக்காவது இக்குறிப்பிட்ட பதிவை அறிமுகம் செய்யுங்கள் (எனது சுயநலனுக்காக அல்ல) வெட்டிவேருக்காக அறிமுகப்படுத்துங்கள். இடர்களற்ற தமிழகத்தை காண்போம்.

Sunday, November 8, 2009

சரிவுகளில் மண் அரிப்பை தடுக்கும் வெட்டிவேர் - அனிமேஷன் படம்

மழை காலங்களில் சரிவுகளில் மண் அரிப்பை மிக எளிதாக வெட்டி வேர் தடுப்பதை அழகாக அனிமேஷனில் நாடுகள், மொழிகளைக் கடந்து பாமர மக்களுக்கும் புரியும் படி அதே சமயம் 2 நிமிடங்களுக்குள் எடுத்துள்ள தாய்லாந்து நாட்டின் திரு. ப்ராசிட்பொன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். உங்கள் பார்வைக்காக அப்படம்.

Friday, November 6, 2009

"பூட் ஜொலோகியா" - உலகின் மிக காரமான மிளகாய்


கின்னஸ் புத்தகத்தில் உலகின் மிகக் காரமான மிளகாய் என்று 2006 இல் இடம் பெற்ற "பூட் ஜொலோகியா" (Bhut Jolokia) என்ற மிளகாயை சில வருட தேடலுக்குப் பின் வடகிழக்கு மாநிலங்களுக்கு சொந்தமானதால் இங்கு வருமா? வராதா? என்ற சந்தேகத்தால் விட்டு விட்டேன். ஆனால் TNAU வில் நடைபெறும் வேளாண்மை அறிவியல் மைய கண்காட்சியில் வடகிழக்கு பிராந்திய அரங்கில் பார்த்த போது ஆவல் மிகுதியில் இது பூட் ஜொலோகியாவா? என்று கேட்டதும் அந்த விஞ்ஞானி மகிழ்ச்சியுடன் அடுத்த 20 நிமிடங்கள் எனக்காக விளக்கம் தந்தார். அருகில் முகர்ந்து பார்த்தாலே காரத்தின் நெடி..

எனது பழைய பதிவை காண "பூட் ஜொலோகியா" (Bhut Jolokia)

விதைகள் வேண்டுவோர் கீழ்கண்ட விலாசத்தில் பெற்றுக்கொள்ளுங்கள்.
The Director,
ICAR (RC) for NEH Region,
Umiam - 793 103
Meghalaya.
Phone : 0364 - 2570257

Wednesday, November 4, 2009

வேளாண்மை அறிவியல் நிலையங்களின் தேசிய மாநாடு - கோவை

தேசிய அளவில் 569 வேளாண்மை அறிவியல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் 30, தமிழகத்தில் உள்ளது. இதில் 14 அறிவியல் நிலையங்கள் கோவை வேளாண்மை பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இம்மாநாட்டில் தமிழக முதல்வர் அவர்களும், மத்திய வேளாண்மை துறை அமைச்சர் திரு. சரத்பவார் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த வேளாண்மை விஞ்ஞானிகள் பங்கேற்கவுள்ள இம்மாநாட்டில் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகளின் அனுபவங்கள், வெற்றிக் கதைகள், சிறப்பு தொழில் நுட்ப பரிமாற்றம் ஆகியவை இடம் பெறும்.

இடம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை.
நாள் : நவம்ர் 6,7,8 தேதிகள்.

Tuesday, November 3, 2009

உருகும் திபெத் பனிப் படிவங்களும் வட இந்திய நதிகளின் எதிர்காலமும்.


திபெத் பீடபூமி பகுதிகளில் பனிப் படிவங்கள் உள்வாங்கி வருவதை சீன ஆராய்ச்சியாளர்கள் ஆவணப் படுத்தி உள்ளார்கள். இதனால் அதில் உற்பத்தியாகும் நதிகளின் நீரோட்டம் உள்ள இந்தியா கடுமையாகப் பாதிக்கப்படும்.


சீனப் பசுமை அமைதி பசுமைப் பூமி தொண்டர்கள் நடத்திய ஆராய்ச்சியில் பனிப்படிவங்கள் குறைவதையும், இமாலய நதிகளின் தொடக்க இடங்களில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தையும் ஆவணப்படுத்தி உள்ளார்கள். திபெத் பீடபூமியில் சில இடங் களில் 2001க்குப் பின் பனிப் படிவங்கள் மூன்று கி.மீ. தொலைவுக்கு பின் வாங்கியுள்ளன.


வெப்ப அதிகரிப்பு மற்றும் பூமி வெப்பமடைதல் கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதால் பனிப்படி வங்கள் அதிவேகமாகக் குறைகின்றன. இந்த அபாய அறிவிப்பை, சீனா, இந்திய அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை. ஆனால், தற்போது அன்று அலட்சியப் படுத்திய சீன அதிகாரிகளும், அரசு அமைப்புகளும் தீவிரமாகக் கவலைப்படத் தொடங்கியுள்ளன.


உலகின் மற்ற பகுதிகளைவிட திபெத் பனிப் படிவங்கள் வேகமாக உருகுகின்றன என்று சீன வானிலை நிர்வாக முன்னாள் இயக்கு நர் கின் டாஹே கூறுகிறார். இதன் விளைவாக ஏரிகள் பெரிதாகும். பெரும் வெள்ளமும் கடும் மண்சரிவும் உண்டாகும். இப்படிவங்கள்தான் சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்ரா ஆகியவற்றின் தாயகமாகும். பனிப் படிவங்கள் அழிந்துவிட்டால் இவற்றின் நீரோட்டமும் வற்றிவிடும்.


தற்போதைய வெப்பம் அடைதல் விகிதத்தில் இமாலயப் பனிப்படிவங்கள் முப்பதாண்டுகளில் அழிந்து விடும். ஆண்டுதோறும் 131.4 ச.கி.மீ. பரப்பளவுள்ள பனிப் படிவங்கள் குறைகின்றன. பனி எல்லைகள் ஆண்டு தோறும் 350 மீ சுருங்குகின்றன.


2005ம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த பனிப்படிவ ஏரி 2009 தொடக்கத்தில் உடைந்தது. பூமி வெப்பம் அடைதலால் உருகிய பனிப்படிவங்கள் கொட்டிய நீரால் இந்த ஏரி உடைந்தது. இதனால் கின் காய் மாகாணத்தில் கடும் சேதம் ஏற்பட்டது. திபெத் பீட பூமியின் பனிப்படிவங்கள் சீனாவின் மஞ்சள் ஆறு மற்றும் யாங்ட்ஸி நதிகளுக்குரிய நீரூற்றாகும்.
Source : தீக்கதிர் கோவை 03-11-09


ஆஸ்திரேலியாவின் மர்ரே டார்லிங் நதி படுகை
பரப்பளவு : சுமார் 1059,000 ச.கீ.மீ
ஆஸ்திரேலியாவின் பரப்பளவில் : 14%
மர்ரே நதியின் நீளம் : 2530 கீ.மீ
டார்லிங் நதியின் நீளம்: 2740 கீ.மீ

இவ்வளவு பெரிய நதிகள் கூட வறட்சியை காட்ட ஆரம்பித்துள்ளது. இது பற்றிய எனது பதிவினைக் காண ஆஸ்திரேலியாவின் மர்ரே டார்லிங் நதி படுகை.