Friday, February 5, 2010

கேரள மாநில அரசின் மனிதாபிமான செயல் - “எண்டோ சல்பான்” மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு.

கடவுளின் சொந்த நாடான (God’s own Country ) கேரள மாநிலத்தில் காசர்கோடு பகுதி முந்திரி சாகுபடிக்கு பெயர் போனது. நிறைய அன்னிய செலவாணியை அள்ளித் தரும் பயிர். அதனை காப்பாற்ற “எண்டோ சல்பான்” என்ற மருந்து ஹெலிகாப்டர் மூலம் தெளிக்கப்பட்டது. வருடங்கள் செல்ல செல்ல நிலம், நீர், காற்று மாசுபாடு அடைந்து அந்த பகுதி மக்களின் வாழ்கை கேள்விக்குரியானது. குறிப்பாக குழந்தைகள் நரம்பு சம்பந்தமான நோயினால் பாதிக்கப்பட்டு நடைபிணமாயினர் என்பதுதான் உண்மை. இது சம்பந்தமாக அடவாடியாக வழக்காடியது மருந்து நிறுவனம். மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டது அவர்களது லாப வெறியை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

பாதிக்கப்பட்ட சுமார் 2000 பேருக்கு நஷ்ட ஈடு தருவதாக கேரள மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரவேற்க தக்க அறிவிப்பு. இதே போன்று இன்று விவாதிக்கப்படும் பி.டி. (Bt )கத்திரியும் இந்த வகையை சார்ந்ததே. 20 அல்லது 30 ஆண்டுகள் கழித்து பாதிப்புக்களை நாம் சந்திக்காவிட்டாலும் வருங்கால குழந்தைகள் சந்திப்பார்கள் அப்போது இதேபோன்று சில ஆயிரம் நஷ்ட ஈடு தருவதாக கூறுவார்கள். ஆனால் பல கோடிகளை லாபமாக கம்பெனிகள் அள்ளிச் சென்றிருக்கும் அதில் சில ஆயிரங்களை தருவதில் அவர்களுக்கு பிரச்சனைகள் இல்லை. “போபால்” விஷ வாயு விபத்தில் இன்னும் கஷ்டங்களை அனுபவிப்பது என்னவோ ஏழை மக்கள்தான். அன்று எண்டோ சல்பானை உபயோகிக்க சொன்ன அதிகாரிகளும், விஞ்ஞானிகளும், கம்பெனியும் வளமுடன்தானுள்ளார்கள். பாவம் திரு.பொதுஜனம்.

TERI நிறுவனத்திற்காக எடுக்கப்பட்ட The Slow Poisoning of India என்ற 26 நிமிட மனதை பிழியும் ஆவணப் படத்தைக் காண கீழேயுள்ள தொடர்பை கிளிக் செய்யவும்.
அவசியம் படத்தைப் பாருங்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டாம்.

http://video.google.com/videoplay?docid=-6926416900837431282