Monday, April 12, 2010

ஒடியன் --- பழங்குடி மக்களின் வாழ்க்கை போராட்ட கவிதை தொகுப்பு.

திரு. லட்சுமணன் அவர்களின் இந்த கவிதை தொகுப்பு எழுத்து வடிவம் இல்லாத இருளர் மொழியின் உச்சரிப்பில் தமிழில் எழுதப்பட்ட கவிதை தொகுப்பு. கவிதைகளின் முடிவில் குறிப்புகள் தந்திருப்பது வாசகர்களுக்கு செய்திகள் மிக தெளிவாக சென்றடைய வேண்டும் என்ற எண்ணமும் அதே சமயம் மெல்ல மெல்ல மறைந்து வரும் ஒரு மொழியை ஆவணப்படுத்தியதும் பாராட்டுதலுக்குரியது.

அட்டைபடம் வேட்டுக்கல் விளைச்சலைக் காக்க கம்பிகளால் காட்டைச் சுற்றி ஆதிவாசிகள் ஏற்படுத்தும் பாதுகாப்புக் கருவி.
வரலாறுகள் எப்போதும் வெற்றி பெற்றவனால் மட்டுமே ஆவணப்படுத்தப்படுகிறது. தோல்வியுற்றவர்களின் வரலாறுகள் இருட்டடிப்பு செய்யப்படும். ஆனால் “ஒடியன்” வித்தியாசமாய் தோல்வியுற்ற கோவமூப்பனின் வாரிசுகளின் நியாயமான வாழ்கை போராட்டத்தையும், ஏமாற்றபட்டதையும் தெள்ளத் தெளிவாக கீழ்நாடுக்காரனுக்கு அவன் முன்னோர்களின் செயலை புரியவைக்கிறது.

சுரண்டுவதில் மேற்கத்திய நாட்டவர்களுக்கு எந்தவித்திலும் கீழ்நாடுக்காரன் சளைத்தவன் இல்லை என்பதை இக்கவிதை நெற்றியிலடித்தாற் போல் கூறுகிறது.

அஞ்சு இட்டிலிக்கூ
ஆறு ஏக்கரே கொடாத்து
காலேவாயிலே
கல்லூ சொமக்கே நா

மண்ணுபாசோ விடுகாதில்லே

ம்க்கூம்
எல்லா சூளேயும்
இச்சாதாஞ் செவக்கு

ஐந்து இட்டிலிக்கு விலை ஆறுஏக்கர். இருளனிடம் கைப்பற்றிய நிலத்தில் செங்கல் சூளை அமைக்கிறார்கள் கீழ்நாடுக்காரர்கள். மண்ணை பிரிய மனம் இல்லாத இருளன் அதே சூளையில் ரத்தம் சுண்ட மண் சுமக்கிறான். பக்கம்: 19 ========================================

நமது கல்வி முறையை கிண்டலாடிக்கும் இந்த கவிதை அவர்கள் படிக்கவேண்டும் என்ற ஆதங்கத்தை வெளிபடுத்துகிறது.

பத்தாவது வருகாக்குள்ளயே
செத்து செத்து பொழைக்கோ
‘ரிசல்டு கொறஞ்சா
ரிவிட்டே அடிப்பாங்க’ ன்னு
பாதியிலே தொரத்துகா

பாஸோ பெயிலோ
படிக்கோனு நாங்க

தொடகே
ஊர் கூட்டுகயிலே
எட்மாஸ்டரையும் போட்டுக்கோ.

தொடகே = பெரியம்மா
ஊர் கூட்டுகயிலே = ஊருக்குள் நோய் அதிகரித்தாலோ மழை பொய்த்தாலோ ஆகாத பொருட்களையெல்லாம் சேகரித்து ஊரின் எல்லையில் போட்டுவிடுவார்கள். (அப்படி எட்மாஸ்டரையும் போடவண்டும்)
பக்கம் : 49
====================================

கவிஞரின் சாடல்

ஒடியன்- தாயின் கர்ப்பத்திலிருந்து சிசுவை எடுத்து தைலம் செய்யும் மந்திரவாதி.

இன்று இயற்கையின் மடியிலிருந்து வனத்தையும் உயிர்களையும் திட்டமிட்டு சிதைத்து அழிக்கும் ஒடியன்கள் கீழ்நாட்டிலிருந்து வந்து மலை முழுவதும் நிறைந்து கிடக்கிறார்கள். பக்கம் : 60

கிடைக்குமிடம்

மணிமொழி பதிப்பகம்,
220 - A முல்லை வீதி,
தந்தை பெரியார் நகர்,
போளூர் சாலை
திருவண்ணாமலை - 606 601

தொலைபேசி: 04175 – 251980
மின்னஞ்சல் : kurinji_flower@yahoo.co.in

விலை. ரூ.50/=

10 comments:

settaikkaran said...

முகவரியை குறித்துக் கொண்டேன் நண்பரே. வாங்கிப் படித்து விட வேண்டும் என்ற ஆரவத்தை ஏற்படுத்திய ஒரு சுவாரசியமான பதிவு.

வின்சென்ட். said...

திரு.சேட்டைக்காரன்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. நான் நடைமுறை வாழ்கையில் சிலவற்றை நேராக பார்த்திருந்தும் மனதை பாதிக்க வைத்த கவிதை தொகுப்பு. அவர்களது பார்வையில் கவிதைகள் இருப்பதுதான் சிறப்பு அம்சம்.அவசியம் படியுங்கள். "அவதார்" போன்றே இருக்கும்.

சந்தனமுல்லை said...

பகிர்வுக்கு மிக்க நன்றி வின்சென்ட்! ஒடியனை வாசிக்கக் காத்திருக்கிறேன். தாங்கள் புத்தக வெளியீட்டில் கலந்துக்கொண்டீர்களா? எனில் மகிழ்ச்சி!:-)

வின்சென்ட். said...

திருமதி.சந்தனமுல்லை

உங்கள் வருகைக்கு நன்றி. அவசியம் படிக்க வேண்டிய கவிதை தொகுப்பு. கடைசி நேரத்தில் வெளியூர் சென்றதால் புத்தக வெளியீட்டில் கலந்து கொள்ள முடியவில்லை. சிறப்பாக நடைபெற்றதாக நண்பர்கள் கூறினார்கள்.

பனித்துளி சங்கர் said...

அறிய தந்தமைக்கு மிக்க நன்றி . குறித்துகொள்கிறேன் விரைவில் வாங்கி படித்துவிடுகிறேன் .

மிகவும் சிறப்பான பதிவு .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

வின்சென்ட். said...

திரு.பனித்துளி சங்கர்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. அவசியம் படிக்க வேண்டிய கவிதை தொகுப்பு.மீண்டும் வாருங்கள். நன்றி.

Lakshmanan said...

மண், மரம், மழை பற்றிமட்டுமே ஒருதலைப்பட்சமாக யோசிக்கிறவர்கள் மத்தியில் மனிதனையும் அவன் வலிகளையும் எப்போதும் பேசும் அம்மக்களோடு நெருங்கியிருக்கிற வின்சென்ட் சாரின் பதிவு எனக்கு ஊக்கமளிக்கிறது இங்கே தங்கள் கருத்தை பதிவு செய்திருக்கிற சேட்டைக்காரன், சங்கர்,முல்லை ஆகியோருக்கு என் நன்றி

வின்சென்ட். said...

திரு.லட்சுமணன்

நீங்களே வந்து பின்னூட்டமிட்டதால் இந்த பதிவு மேலும் பெருமை பெறுகிறது. உங்கள் வருகைக்கு எனது மனமார்ந்த நன்றி.

"இன்று இயற்கையின் மடியிலிருந்து வனத்தையும் உயிர்களையும் திட்டமிட்டு சிதைத்து அழிக்கும் ஒடியன்கள் கீழ்நாட்டிலிருந்து வந்து மலை முழுவதும் நிறைந்து கிடக்கிறார்கள்"

இன்று உலகம் முழுவதும் நிறைந்திருக்கிறார்கள் இவர்களில் நன்கு படித்தவர்களும், முனைவர் பட்டங்கள் பெற்றவர்களும் அடக்கம் என்பதுதான் விசேஷம். எல்லாவற்றையும் பணம் என்ற அளவுகோல் மூலம் இவர்கள் அளப்பதால் மனிதாபிமானம், உதவி என்பது இங்கே இருப்பதில்லை. மீண்டும் உங்கள் வருகைக்கு நன்றி.

Essar Trust said...

அழகான வரிகளில் கருத்தை நச்சுன்று சொல்லியிருக்கீங்க!!
கவிதையின் பாடுபொருள் மிகவும் காரசாரமாகவுள்ளது!!!
வாழ்த்துக்கள்......

வின்சென்ட். said...

பொறுப்பாளர் எஸ்ஸார் டிரஸ்ட்.

உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.