Saturday, July 31, 2010

உழுவதற்கும் களை எடுப்பதற்கும் ஓர் எளிய கருவி


வேகமாகச் சுருங்கிவரும் விளைநிலங்கள், கடுமையான ஆட்பற்றாக்குறை, வீழ்ந்துவரும் வருமானம் போன்ற காரணங்களால் விவசாயத்தைத் தொடரத்தான் வேண்டுமா என்ற கேள்வி விவசாயிகளிடையே எழுந்துள்ளது. “குறுநில விவசாயிகளுக்கு ஒரு ஜோடி உழவு மாடுகளைப் பராமரிப்பதே பெரும் சுமையாக மாறிவந்தபோது, டிராக்டரை வாங்குவதற்கு வங்கிக்கடன் தாராளமாகக் கிடைத்ததால் அது அவர்களுக்கு ஒரு மாற்றாக முதலில் தோன் றியது. ஆனால் மாதாமாதம் கடனைத் திருப்பிக் கட்டுவது இயலாததாக மாறி, நிலத்தையே விற்கவேண்டிய நிலைக்கு பல விவசாயிகள் தள்ளப்பட்டனர்” என்கிறார் அகமதாபாதிலுள்ள தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் நிதின் மௌரியா.

கருவி உருவான விதம்

விவசாயிகளுக்குச் சொந்தமான நிலம் ஒரு ஏக்கரோ, 10 ஏக்கர்களோ உழுவதையும் களை எடுப்பதையும் அவர்கள் தொடர்ந்து செய்தாக வேண்டும். ஆட்பற்றாக்குறையைச் சமாளிக்க மகாராஷ்ட்ர மாநில ஜல்கான் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி கோபால் பிஸே உருவாக்கிய கிருஷிராஜா என்ற சைக்கிள் களை எடுப்புக் கருவிக்கு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. உழவு மாடுகளை வாங்கக்கூட இயலாத நிலையில் இம்மாதிரி ஒரு கருவியைத் தயாரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார் பிஸே.

“எங்களுக்குச் சொந்தமான 0.8 ஹெக்டேர் நிலம் வளமான பூமிதான். கிணறு தோண்டுவதற்கு ஆட்களை அமர்த்த வசதி இல்லாததால் நானும் என் மனைவியுமே சிரமப்பட்டு ஒரு கிணற்றைத் தோண்டினோம். ஒரு நாள் ஒரு சைக்கிளில் சில மாவு மூட்டைகளை ஏற்றிச் சென்ற ஒரு வியாபாரியைப் பார்த்ததும் உழவுக்குப் பயன்படும் வகையில் சைக்கிளை மாற்றியமைக்கும் யோசனை எனக்கு வந்தது. என்னை மாதிரியோர் ஏழை விவசாயிக்கு ஒரு ஜோடி உழவு மாடுகளைவிட ஒரு சைக்கிளைப் பராமரிப்பது கட்டுப்படியாகக் கூடியது. உழவு மாடுகளுக்குப் பதிலாக அவை செய்யக் கூடிய வேலைகளைச் செய்யும் வகையில் ஒரு சைக்கிளின் முன் சக்கரம், அச்சு, ஹாண்டில்பார் ஆகியவற்றை மாற்றியமைத்தேன்” என்கிறார் கோபால் பிஸே.

விடாமுயற்சிக்குப் பலன்

களையெடுப்பதற்கும் உழுவதற்கும் தனித்தனியான உபகருவிகளை கிருஷி ராஜாவுடன் இணைத்துக் கொள்ள முடியும். “சைக்கிளை நான் இம்மாதிரி மாற்றி யமைப்பதைப் பார்த்து மற்ற விவசாயிகள் முதலில் கேலியாகச் சிரித்தனர். ஆனால் நான் விடா முயற்சியுடன் பாடுபட்டேன். கடைசியில் என் உழைப்புக்குப் பலன் கிடைத்திருக்கிறது. இன்று கிருஷி ராஜாவுக்கு உள்ளூர் சந்தையில் நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது” என்கிறார் பிஸே பெரு மையுடன். இக்கருவியைக் கொண்டு அவ்வளவாக இறுக்கம் இல்லாத மண்ணை ஓரடி ஆழம் வரை உழமுடியும். ஜல்கான் மாவட்டத்தில் 200 விவசாயிகள் உழவு மாடுகளை விட்டுவிட்டு, கிருஷிராஜாவுக்கு மாறிவிட்டனர்

மேற்கொண்டு தகவல் வேண்டுவோர்
திரு கோபால் பிஸேயுடன் (9970521044)
டாக்டர். நிதின் மௌரியாவுடன் (079/26732456) தொடர்பு கொள்ளலாம்.

(தகவல் & புகைப்படம் : தி இந்து). தமிழாக்கம் -பேராசிரியர் கே. ராஜு தீக்கதீர்

Monday, July 26, 2010

பிரம்மபுத்திரா நதியில் வெட்டிவேர் கொண்டு மண் அரிப்பை தடுக்கும் சிறு முயற்சி.

இந்திய நதிகளில் பிரம்மபுத்திரா நதி மிக பிரமாண்டமானது. மழைகாலங்களில் வெள்ளம் மற்றும் மண் அரிப்பு மிக அதிகமாக இருக்கும், குறிப்பாக அஸ்ஸாம் மாநிலம் இதற்கு பெயர் பெற்றது.


வெள்ளப் பெருக்கு.
அதே சமயம் குளிர் காலங்களில் தண்ணீரின் மட்டம் குறைவதால் கரை உடைந்து மண் சரிவு ஏற்பட்டு சகதி ( Slough ) ஏற்படுகிறது.
குளிர் காலங்களில் நீர் மட்டம் குறைவதால் மண் சரிவு ஏற்படுகிறது.
கடந்த 50 வருடங்களாக இந்திய அறிஞர்களும் வெளிநாட்டு அறிஞர்களும் ஆய்வுகள் செய்தாலும் சரியான ஒரு தீர்வு அவர்கள் பிரம்மபுத்திரா நதி மண் அரிப்பிற்கு தரவில்லை. குளிர் காலத்தில் நீர் குறைவாக செல்வதால் கரைமட்டதிற்கும் நீர் மட்டதிற்கும் உள்ள இடைவெளி 6-7 மீட்டர் இருக்கும். மணல் கலந்து இருக்கும் மண். சரிவு சில இடங்களில் செங்குத்தாகவும் சில இடங்களில் உள்வாங்கியும் இருக்கும்.

அஸ்ஸாம் மாநில அரசு, துணை நதியான “டைசேங்” பிரம்மபுத்திரா நதியுடன் சேரும் 500 மீட்டர் பகுதியை வெட்டிவேர் கொண்டு மண் அரிப்பைத் தடுக்க திரு. சந்தானு பட்டாச்சாரியா அவர்களிடம் ஒப்படைத்தார்கள். 28-02-2010 அன்று வெட்டிவேர் நடவு ஆரம்பிக்கப்பட்டது. நதியின் போக்கிற்கு இணையாக வரிசைக்கு வரிசை 1 மீட்டர் , செடிக்குச் செடி 10 செ.மீ இடைவெளியில் நடப்பட்டன. அது போன்று 12 வரிசைகள் நடப்பட்டன. சாண எருவும், வேம் (Vam) இரண்டும் நடவில் உடயோகிக்கப்பட்டது. மார்சு மாதம் மழை பெய்ததால் நீர் பாய்ச்சல் கொடுக்கப்படவில்லை.

பின் மெதுவாக ஆரம்பித்த மழை 17-04-2010 அன்று வெட்டிவேர் நடப்பட்ட பகுதிக்கு மேல் படகுகள் செல்லும் அளவிற்கு முழுவதுமாக நீரில் முழ்கடித்தது. இதுவரை 5 முறை முழுவதுமாக முழ்கியுள்ளது. இறுதியான வெற்றியைக் காண செப்டம்பர் வரை வெள்ள அரிப்பிற்கும், மார்சு வரை நீர் மட்ட குறைவால் ஏற்படும் மண் சரிவிற்கும் காத்திருக்க வேண்டும். இந்தப் பொழுது வரை மண் அரிப்பு ஏற்படாமல் வெட்டிவேர் அந்தப் பகுதியை காப்பாற்றியுள்ளது என்பதை மேலேயுள்ள படம் விளக்கம் தரும்.

இதே போன்று தமிழக நதிகளின் அருகே மண் அரிப்பை தடுக்கமுடியும். காலம் கனிந்து வரவேண்டும்.


திரு. சந்தானு பட்டாச்சாரியா எனக்கு அனுப்பியிருந்த தகவலை சுருக்கியும் மற்றும் முக்கியமான புகைப்படங்களையும் கொண்டு மேற்கண்ட தகவலை உங்களுக்கு அளித்திருக்கிறேன்.

திரு. சந்தானு பட்டாச்சாரியா.
திரு. சந்தானு பட்டாச்சாரியா அஸ்ஸாம் மாநில பொதுபணித் துறையில் பொறியாளர். கிழக்கு இந்திய வெட்டிவேர் அமைப்பின் கௌரவ செயல் இயக்குனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர். சிறந்த சுற்றுச் சுழல் ஆர்வலர். அவரும் அவர் செய்யும் அரிய பணிகளும் மேலும் சிறக்க வாழ்த்தி உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவதில் இவ்வலைப் பூ பெருமை கொள்ளுகிறது.

Friday, July 23, 2010

சரிவுகளில் வெட்டிவேரின் உதவியால் மண் அரிப்பைத் தடுத்து மழைநீரை சேமித்தல்.

குறைந்து வரும் பருவ மழையில் கிடைக்கின்ற நீரை நிலங்களில் எளிதாகவும் அதே சமயம் அதிக மழை பெய்தால் மண் அரிப்பையும் தடுத்து நீரை சேமிக்க முடியும். சரிவுப் பகுதியில் பொதுவாக 5 அடி முதல் 10 அடி வரை விதைப்பதில்லை வெட்டிவேரின் உதவியால் இந்த பகுதிகளிலும் விதைப்பு செய்ய முடியும். இந்த முறையில் மூன்று நன்மைகள் கிடைகின்றது.

பலத்த மழையின் போது மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. உழுதபகுதியில் அரிப்பு இருந்தாலும் அந்த மண் அருகிலிருக்கும் குழியில் சேமிக்கப்படுகிறது.

சரிவுகளில் மழைநீர் சேமிக்கப்படுகிறது. இதனால் கீழ் பகுதிக்கு ஈரக் கசிவு இருந்து கொண்டே இருப்பதால் அங்குள்ள பயிர்களும் செழிப்புடன் இருக்கும்.

வெட்டிவேரின் ஸ்திரத் தன்மையால் மேலும் அதிக இடத்தை விதைக்க முடியும்.
புதிதாக வெட்டிய குழியின் மேற்பகுதியில் வெட்டிவேர் நாற்றுக்கள். மண் இறுக்கமின்மை காரணமாய் வேர் எளிதில் இறங்கும்.( இந்த வருட நடவு )
சென்ற வருடங்களில் நடப்பட்ட நாற்றுக்கள். இன்று அரணாக இருக்கிறது.

அம்புக் குறியிட்ட பகுதியில் விதைக்கபடாமல் உள்ளது. வரும் ஆண்டுகளில் விதைக்கலாம்.

Thursday, July 22, 2010

தாவர வகைப்பாட்டியல் - ஒரு வரலாற்றுப் பார்வை

ஐரோப்பிய மொழியில் இருக்கும் தாவர குடும்பங்கள் பற்றியும் தாவரவியல் பெயர்கள் பற்றியும் தெரிந்து கொள்ளும் போது ஆரம்ப காலத்தில் குழப்பமாக இருக்கும். இவை தேவைதானா? என்று கூட நினைக்கத் தோன்றும். தமிழகத்திலேயே ஓரே செடிக்கு பல வட்டாரப் பெயர்கள் உண்டு. இனி நாடு பின் உலகம் என்று எடுத்தால்.... எனவே தாவரப் பெயர்கள் அவசியம் தேவை. பழகிய பின்பு எளிதாக வேற்றுமொழி நண்பர்களுடன் உரையாடும் போது சரியான தாவரவியல் பெயரை அடையாளப்படுத்தி பேசும் போது அவர்களும் சரியான தகவல்களை தரும்போது மகிழ்ச்சியாக இருக்கும். குறிப்பாக மூலிகை தாவரங்களை அடையாளப்படுத்தி பயன்படுத்தினால் மாத்திரமே நோய்க்கு மருந்து இல்லையேல்?

பேராசிரியர்.ப. மகேந்திரமணி அவர்கள்

கிறிஸ்து பிறப்பதற்கு முன் தொடங்கி நிகழ்காலம் வரை எவ்வாறு வகைபடுத்தினார்கள், பெயரிட்டார்கள், அதில் ஈடுபட்ட மேதைகள் அதனால் ஏற்பட்ட நிகழ்வுகள் போன்றவற்றை எளிய தமிழ் நடையில் பேராசிரியர் திரு. மகேந்திரமணி அவர்கள் ஓய்வுக்குப் பின் தாவர வகைப்பாட்டியல் - ஒரு வரலாற்றுப் பார்வை என்ற இந்நூலில் மிக தெளிவாக, விளக்கியிருக்கிறார்.

தாய்மொழியில் தாவரவியல் பயிலும் மாணவர்களுக்கு தாவர வகைப்பாடுகள், அவற்றை அடையாளம் காணும் முறை பற்றி அறிய இந்நூல் பெரிதும் உதவும். எளிய உதாரணங்களுடன் படவிளக்கங்கள், இணைய வலைதளங்கள் பற்றிய குறிப்புக்கள் இருப்பதால் அனைவருக்குமே இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும்.

கிடைக்குமிடம்:-
பேராசிரியர்.ப. மகேந்திரமணி
7/27, 4 வீதி - பாலகுருகார்டன்
கோவை - 641 004.

அலைபேசி 99945 83478.
விலை. ரூ.60/=

Saturday, July 17, 2010

வித்தியாசமாய் ஒரு விழிப்புணர்வு கண்காட்சி.

மணல் சிற்பம் .
இன்று ( 17-07-2010 ) “ சிறுதுளி ” அமைப்பின் சிறுதுளி பெருவெள்ளம்... அன்றும் , இன்றும் என்ற மழைநீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு கண்காட்சி. கோவை வ.உ.சி மைதானத்தில் துவங்கியது. மதிப்பிற்குரிய டாக்டர்.அப்துல் கலாம் அவர்கள் துவக்கி வைத்தார்கள். பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்று சிறப்பாக மாதிரி அமைப்புக்களை உருவாக்கியிருந்தனர். மணல் சிற்பம் அனைவரையும் கவர்ந்தது. ஸ்கோப் அமைப்பின் ஆரோக்கியமான கழிவறை, மழைநீரை சுத்தப்படுத்தி சேமிக்க உதவும் IISc, பெங்களூர் நிறவனத்தின் கண்டுபிடிப்பு, CDD (Consortium for DEWATS Dissemination Society ) இன் கழிவு நீர் சுத்திகரிப்பு முறை என சுற்றுச்சுழலை காப்பாற்ற உதவும் பல நல்ல விஷயங்கள் விளக்கங்களுக்கும், நாமே நிறுவி பயன்படுத்துவதற்கும் இருந்தது மன நிறைவை தந்தது. இன்றைய காலத்திற்கு மிக அவசியமான இந்த கண்காட்சி நாளையும் நடைபெறும்.

நொய்யல் ஆற்றின் மாதிரியை பார்வையிடும் மதிப்பிற்குரிய டாக்டர். அப்துல் கலாம் அவர்கள்.
விளக்கம் தரும் பள்ளி மாணவன்.
மழைநீரை சுத்தப்படுத்தும். IISc, பெங்களூர் நிறுவனத்தின் கண்டுபிடிப்பு,
ஸ்கோப் அமைப்பின் கழிவறை அமைப்பு காலத்தின் தேவை.

சரியான மழைநீர் சேமிப்பு அமைப்பு.

மழை காலத்தில் கேரளாவில் அதிகம் காணப்படும் நீர் சேமிப்பு முறை.

நீர் எடுக்கும் முறை.


நீர் பற்றிய மிகத் தெளிவான உண்மை.

Tuesday, July 13, 2010

உயர்தர நாட்டு பசுக்கள் - ஒரு ஆர்வலரின் அனுபவம்


திரு.திரு. ராஜேந்திரன் அவர்கள் கிர் இன பசுக்களுடன்

கோவை புதூரில் வசிக்கும் நண்பர் திரு. ராஜேந்திரன் அவர்கள் தான் வளர்ப்பதற்காக நமது நாட்டு இன மாடுகளை தெரிவு செய்து அதன் தொடர்ச்சியாக அவர் குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் பூர்வீகமாக இனமான தார்பார்க்கர், கிர், காங்ரெஜ் போன்ற இனங்களை அம்மாநிலங்களுக்கு நேரில் சென்று பார்த்து வந்து அவ்வினங்கள் பற்றிய தகவல்களையும், புகைபடங்களையும் பகிர்ந்து கொண்டார். அவை மிக பயனுள்ளதாக இருப்பதால் அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். பொதுவாக இவை நோய் எதிர்ப்பு சக்தியுடன் வெயில் மற்றும் குளிர் இரண்டையும் தாங்கி வளர்வதாலும், பால் குறைந்த பட்சம் 10 - 15 லிட்டர் வரை கறப்பதாலும் நம் பகுதியில் லாபகரமாக பாராமரிக்க முடியும் என்பது அவரது கணிப்பு. மேலும் அதன் கோமியமும் , சாணமும் இயற்கை வேளாண்மைக்கு மிகச் சிறந்தது. பாலுக்கு சிறந்த மருத்துவ குணம் இருப்பதால் நல்ல விலையும் கிடைக்கிறது.

மேலும் தகவலுக்கு
S.ராஜேந்திரன்
கோவைப் புதூர்
கோயமுத்தூர் 641 042
அலை பேசி 92620 41231

Friday, July 9, 2010

உள்ளம் ஊஞ்சல் ஆடுவதும்..... உயிர் ஊசல் ஆடுவதும்.....

தமிழகத்தின் முன்னோடி இயற்கை விவசாயி திரு. மது இராம கிருஷ்ணன் அவர்கள் கோவையில் நடைபெற்ற இணைய மாநாடு 2010 இல் இயற்கை விவசாயம் பற்றி படத் தொகுப்புடன் பேசினார்கள். காண்பிக்கப்பட்ட படங்களில் ஒன்று இன்றைய உலக விவசாயத்தை எளிமையாக படம் பிடித்து காட்டியது.
ஆப்ரிக்காவின் பஞ்சம் தொடங்கி இந்தியாவின் விவசாய தற்கொலைகளுக்கு காரணம் மிக தெளிவாக இருந்தது. அதனை உங்களிடம் காட்சியாக வைத்து, மழைகாலம் ஆரம்பமாகவுள்ளது உங்களால் ஆன மரம் நடும் முயற்சிகளை உங்களுக்காகவும் உங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சியான எதிர்
காலத்திற்காகவும் செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

Thursday, July 8, 2010

இந்த விழிப்புணர்வு சம்பரதாய முறையாக மாறினால்......

பொதுவாக திருமண வைபவங்களில் உடை, உணவு, ஆபரணம் போன்ற காரியங்களுக்காக நிறைய செலவு செய்வதை நடைமுறை வாழ்கையில் பார்க்கிறோம். வெகு சிலரே சமூகம், உலகம் நன்றாக இருக்க இதுபோன்ற வைபவங்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக உபயோகப்படுத்திக் கொள்ளுகின்றனர். திரு.பிரஷாந் அவர்களை அவரது பள்ளிக்கூட நாட்களிலிருந்தே நன்கு அறிவேன். சென்ற மாதம் திருமணம் இனிதே நடந்து முடிந்தது. திருமணம் முடிவானவுடன் என்னிடம் அவர்களது குடும்பம் சார்பாக வரும் விருந்தினர்களுக்கு மரக் கன்றுகளை இலவசமாக அளிக்க விரும்புவதாக கூறியபோது மிக்க மகிழ்ச்சியடைந்தேன். திரு. பிரஷாந்
இதுபோன்ற செயல்கள் வரவேற்பைத் தருமா? என்ற எண்ணமும் இருந்தது. ஆனால் எண்ணியதிற்கும் மேலாக இரண்டு மணிநேரத்தில் அனைத்து மரக்கன்றுகளும் எடுத்துச் செல்லப்பட்டது. நிறைய விருந்தினர்களுக்கு கன்றுகள் கிடைக்காமல் போனது வேறு விஷயம்.

இங்கே நான் குறிப்பிட விரும்புவது மக்களிடம் விழிப்புணர்வு நிறையவே உள்ளது. அவர்களின் நேரம், நாற்றுக்கள் கிடைக்குமிடம் பற்றி அறியாமல் இருப்பது போன்ற காரணங்களால் அவர்களால் எண்ணியபடி செய்யமுடிவதில்லை. இதுபோன்ற தருணங்களை நாம் அளித்தால் அவர்கள் என்றும் (மரத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம்) நம்மை மறவாமல் இருப்பதற்கு ஒரு வாய்ப்பும் ஏற்படுகிறது.

இதுபோன்ற நல்ல காரியங்கள் நாளடைவில் வைபவ நாட்களில் சம்பரதாய முறையாக மாறினால் ஆரோக்கியமான எதிர் காலம் நிச்சயம் உண்டு. புதுமண தம்பதிகளை உங்கள் சார்பாகவும் இவ்வலைப் பூவின் சார்பாகவும் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன்.