Thursday, December 27, 2012

கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு தொழில்நுட்ப கண்காட்சி - கோவை





விவசாயக் கண்காட்சியோடு சேர்ந்து இருந்த கால்நடை கண்காட்சி காலத்தின் அருமை, மக்களின் தேவையை கருத்தில் கொண்டு  தனியாக கால்நடை மற்றும் மீன் வளர்ப்புக்கென்றே தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கோவையில் இந்த தொழில்நுட்ப கண்காட்சி நடத்துகிறது. மாறி வரும் வணிகம், வளர்ப்பு முறை, தீவனம், இனம், நோய்தடுப்பு, வேலை வாய்ப்பு, கருத்தரங்கம், கலந்துரையாடல்கள்  என்று பயனுள்ள பல்வேறு அம்சங்கள்  இருக்குமென்பதில்  இருவேறு கருத்துகள் இருக்கமுடியாது. பயன்படுத்தி மேன்மையடைவது நம் கையில்தான் உள்ளது.

Sunday, December 9, 2012

கரும்பு இனப்பெருக்கு நிலையம் நடத்தும் நூற்றாண்டு விழா புகைப்படப் போட்டி

      Inline images 1

 இவ்வருடம் நூற்றாண்டு காணும் கோவை கரும்பு இனப்பெருக்கு நிலையம் ,  அகில இந்திய அளவிலான புகைப்படப் போட்டியினை நடத்த உள்ளது  .  இந்தியாவில் வாழும் 18 வயதிற்கு மேற்பட்ட இந்திய குடிமகன்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம் . அனுமதி இலவசம்.       'கரும்பு' என்னும் தலைப்பில் sbiphotocontest@gmail.com என்ற  மின்னஞ்சல் முகவரிக்கு படங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி   15-12-12 இந்திய நேரம் நண்பகல் 12 மணியாகும்.
          நுழைவுப் படிவம் மற்றும் போட்டி விதிமுறைகளை http://www.sugarcane100.blogspot.in , www.sugarcane.res.in  மற்றும்  www.caneinfo.nic.in என்னும் தளங்களில் காணலாம்

கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துகள்!!!!

Monday, October 22, 2012

கைபிடி சுவற்றில் கீரை வளர்ப்பு. (Growing greens on parapet Wall).



இடப் பற்றாக் குறையும், குறைவான சூரிய ஒளியும் இன்றைய பெருநகர மக்களின் வீட்டுத்தோட்ட ஆசையை குறைக்கும் காரணிகள், கூடவே தண்ணீர் பற்றாக்குறையும் சேர்ந்து பயப்படுத்தும். ஆனால்  மாடி கைபிடி சுவர் பயனின்றி இருக்கும் அதனை உபயோகித்து கீரையை வளர்க்க முடியுமா? என்று முயன்றதில் முடியும் என்று தோன்றுகிறது. வளர்க்கும் பை முழுவதும் (செடி இருக்கும் இடம் தவிர) மூடப்பட்டிருப்பதால் நீர் ஆவியாதலை வெகுவாக தவிர்த்து குறைந்த நீரில் களைகளின்றி  வளர்க்க முடியும். அதன் படங்கள் உங்கள் பார்வைக்கு



Wednesday, September 5, 2012

"பெட் பாட்டில்" மறுஉபயோகம் (Reusing Pet Bottles )

நதி ?????????


பெட் பாட்டில் மறுஉயோகம் வருங்காலத்தில் மாசுபாட்டை குறைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் எவ்வாறு அதனை செய்வது என்று பல்வேறு உபயோகங்களை புகைபடங்களாக எனது முகநூல் நண்பர்கள் பகிர்ந்தனர். அவற்றை தொகுத்து உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். உங்களால் முடிந்ததை தேர்வு செய்து மாசுபாட்டை குறையுங்கள்.

Tuesday, September 4, 2012

அசோகமரம்- அழிவின் விளிம்பில் இருக்கும் பாரம்பரிய மரம்


அசோகமரமும் நெட்டி லிங்கமும்


பெயர்                  : அசோகமரம்
தாவரவியல் பெயர்     :   Saraca asoca
ஆங்கிலப் பெயர்       : Asoka Tree
தற்போதைய நிலை  : அழிவின் விளிம்பு                                                                                IUCN   Status : Vulnerable (IUCN 2.3) 
பாரம்பரிய இந்திய அடையாளங்களில் ஒன்று அசோகமரம். அசோகமரம் என்றவுடன் பொதுவாக நம் நினைவிற்கு வருவது நெட்டிலிங்க மரம் தான். இராமாயன காலத்தில் சீதையை அசோக வனத்தில் சிறை வைத்ததாக படித்திருக்கிறோம். ஆனால் காலப்போக்கில் அந்த உண்மையான மருத்துவ குணமிக்க அசோகமரத்தை விட்டு நெட்டிலிங்கத்தை அசோகமரம் என்று பின்வரும் சந்ததிகளுக்கு  அடையாளப்- படுத்திவிட்டோம். விளைவு இன்று நெட்டிலிங்கத்தை  அசோகமரம் என்று பெரும்பாலானவர்கள் நம்பிக் கொண்டிருப்பது வேதனை தரும் விஷயம்.                        
அசோகமர விதைகள்
அசோகமர பூக்கள்
 பெண்களுக்கான மரம். இதன் பட்டையும் மலர்களும் நமது மருத்துவத்தில் பயன்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறு, சூதகவலிக்கு பட்டையை கஷாயம் செய்து அருந்த குணம் உண்டு என இந்திய மருத்துவ நூல்கள் கூறுகின்றன
அசோகமர காய்கள்
அசோகமரம்


இதன் தற்போதைய நிலைமை அழிந்துவரும் இனத்தில் விளிம்பு நிலையில் உள்ளது. இம்மரம் சோகத்தை மாற்றி அசோகத்தை (மகிழ்ச்சியை) தரும் என்பது வழக்கு. மன்மதனின் மலர்கணையில் உள்ள மலர்களில் இதுவும் ஒன்று. கண்டிப்பாக ஒவ்வொரு பெண்கள் படிக்கும் கல்விநிலையங்களில் இருக்க வேண்டிய மரம் அசோகமரம். வீடுகளிலும் வளர்க்கலாம்
அசோக மர நாற்றுக்கள்

Friday, August 31, 2012

தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட “Small is Beautiful”


உலகின் சிறந்த நூறு புத்தகங்களில் ஒன்றாக டைம் பத்திரிக்கை தேர்ந்தெடுத்த   “Small is Beautiful” என்ற புகழ் பெற்ற நூல் இப்பொழுது திரு எம். யூசுப் ராஜா அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு "சிறியதே அழகு" என்று தற்போது விற்பனையில் கோவை புத்தகக் கண்காட்சியில் பார்த்த போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஏற்கனவே  நான் இந்நூலுக்கு எழுதிய விமர்சனத்தை மீண்டும் பதிவிடுகிறேன்

E.F.ஷூமாக்கர் என்ற பொருளாதார நிபுணரை நான் பொருளாதார தீர்க்கதரிசியாகத்தான் பார்க்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய “Small is Beautiful” படித்தேன். எவ்வளவு தீர்க்கமாய் எதிர்காலத்தை கணித்திருக்கிறார் என்று வியந்ததுண்டு. ஜப்பான் சுனாமி அதன் பின் ஏற்பட்ட அணு உலை பாதிப்புக்குப் பின் மீண்டும் படிக்கவேண்டுமென்று நினைத்தபோது பரிசாக அப்புத்தகம் கிடைத்தது. 1973 ஆண்டு வெளியிடப்பட்டது அப்புத்தகம். ஆனால் உலகின் சுற்றுச்சுழல், இயற்கை விவசாயம் ( குறிப்பாக மேல் மண் Top Soil) , கல்வி, எரிபொருள், அணுசக்தி, நிலைத்த பொருளாதாரம், உதவிகள்  என்று எழுபதுகளில் அவர் பேசியது, எழுதியது இன்று நிஜமாகி வருவது அவரின் தீர்க்கமான கணிப்புக்கு சான்று. ஆட்சியாளர்களும், கண்டிப்பாக எல்லா துறை மாணவர்களும்  படிக்க வேண்டிய ஒரு நூல். மகாத்மா காந்தி அவர்களின் மேற்கோள்கள் நிறைய உண்டு.

குறிப்பு நூல்களில் இரு இந்திய நூல்களும் உண்டு
1. Art and Swadeshi By Ananda K. Coomaraswamy
2. Economy of Permanence  By J.C. Kumarappa. 

எனது பழைய பதிவு


நூல் கிடைக்குமிடம் :
எதிர் வெளியீடு
96, நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி. 642 002.
தொலைபேசி 04259-226012,
அலை பேசி 98950 05084

விலை: ரூ.180/=

Monday, August 6, 2012

ஹிரோஷிமா நினைவு தினம்.


ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சின் 67 வது நினைவு தினம். இலட்சகணக்கில் மறைந்த அப்பாவி மக்களுக்கு இவ்வலைப் பூவின் மௌன அஞ்சலி.

Of all the changes introduced by man into the household of nature, large-scale nuclear fission is undoubtedly the most dangerous and profound. As a result, ionising radiation has become the most serious agent of pollution of the environment and the greatest threat to man's survival on earth.
-E.F.Schmacher

Wednesday, July 25, 2012

பாரம்பரிய விதை திருவிழா மற்றும் கண்காட்சி கோவை.- 2012


பாரம்பரிய விதை திருவிழா மற்றும் கண்காட்சி குறித்த நேரத்தில் ஆரம்பித்து பயிர்காப்பு, சுற்றுச்சுழல், இஸ்ரேல் நாட்டு விவசாயம், எளிய கால்நடை வைத்தியம் என்று பல நிகழ்வுகள் பயனுள்ளதாக இருந்தது. முனைவர். கோ.நம்மாழ்வார் ஐயா அவர்கள் அறிவுரை இன்றைய விவசாயத்திற்கு மிகத் தேவை என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்கமுடியாது. கண்காட்சியில் நிறைய பாரம்பரிய தானிய, பருப்பு மற்றும் காய்கறி விதைகள் காட்சிக்கு இருந்தது பயனுள்ளதாகவும் சிறப்பாகவும் இருந்தது. முனைவர்.கோ.நம்மாழ்வார் ஐயா அவர்கள் எழுதிய இனி விதைகளே பேராயுதம் என்னும் நூல் அனைவருக்கும் வழங்கப்பட்டது. முனைவர். நீ. செல்வம் அவர்கள் எழுதிய விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி என்ற நூலை ஐயா வெளியிட அடியேன் பெற்றுக் கொண்டேன். பசுமை விகடனில் பூச்சிகளும் நம் நண்பர்களே! என்று தொடராய் வந்ததின் தொகுப்பு. நிகழ்வுகள்  படத்தொகுப்பாய் உங்கள் பார்வைக்கு.  

Tuesday, July 17, 2012

பறவை, மரம் உறவுக்களுக்கு இடையே மனிதன் ?????


டோடோ பறவை
 தாவரங்களுக்கும், பறவைகள்+மிருகங்களுக்கும் உள்ள உறவு ஒன்றுக்கொன்று சார்ந்தது. பறவைகள் மற்றும் மிருகங்களின் உணவுப் பாதையில் சென்று வரும் விதைகளுக்கு முளைப்புத் திறன் அதிகமாக இருக்கும். தாவரங்கள் அவற்றிற்கு உணவளித்து பாதுகாப்பதால் நன்றிக் கடனாக அவைகளின் வித்துக்களை எளிதாக முளைக்கச் செய்து காடெங்கும் பரவச் செய்யும். இந்த நிலையில் மனிதன் இவற்றிக்கிடையே நுழையும் போது இரண்டிற்கும் அழிவு சர்வ நிச்சயமாகிறது.

கல்வாரியா மரம்
1970 களில் மொரீஷிஸ் தீவின் கணக்கெடுப்பு ஒன்றில்  வெறும் 13 கல்வாரியா மரங்களே இருந்தன. அவைகள் அனைத்தும் 300 வருட மரங்களாக இருந்தன. தீவிர ஆராய்ச்சியில் அந்த தீவில் வாழ்ந்த டோடோ பறவையின் அழிவிற்கும் இந்த மரத்திற்கும் இருந்த தொடர்பு தெரிய வந்தது. 1500 ஆம் ஆண்டுகளில் மொரீஷிஸ் தீவில் கால்பதித்த ஐரோப்பிய கடலோடிகள் அதிக எடையுள்ள பறக்க முடியாத இந்த பறவையைப் பார்த்தவுடன் அடித்து உண்ண ஆரம்பித்தனர். அவர்களுடன் வந்த பிராணிகளும் அதன் முட்டைகளை ருசி பார்த்தன.   விளைவு மனிதன் கால் பதித்த 100 ஆண்டுகளில் டோடோ பறவை இனம் இந்த உலகை விட்டு மறைந்தது. 1681 ஆண்டு கடைசி டோடோ பறவை தன் உயிரை விட்டது

கல்வாரியா மர விதை
  அதற்கு பின்பு இம்மரங்களின் விதைகளுக்கு முளைப்புத் திறனின்றிப் போனது. காரணம் கல்வாரியா மரவிதைகளை டோடோ பறவைகள் உணவாகக் கொண்டது. அதன் உணவுப் பாதையில் வெளி வந்த விதைகளே முளைப்புத் திறன் பெற்றிருந்தது. தற்சமயம் வான்கோழியின் உதவியுடன் விதைகளை முளைக்க செய்ய முயற்சிகள் நடை பெறுகின்றன. நமது சந்தன மர விதைகளுக்கு இந்த உறவு பொருந்தும். இதுபோன்று எவ்வளவு ஜீவராசிகளை அழித்திருக்கிறோமோ??? கண்ணுக்கு தெரிந்த உயிரினங்கள் சரி!! கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள்??? இன்னும் சில ஆண்டுகளில் தெரியவரும். அப்போது அவைகள் அழிந்து பல ஆண்டுகள் ஆகியிருப்பது தெரியும்.
படங்கள் உதவி : கூகுள்தளம்

Friday, July 13, 2012

விதை காப்பாளர்கள் – (5)

குதிர் பெரியது.
 இந்திய விவசாயத்தின் மிக பெரிய பலமாக இருந்தது பாரம்பரிய விதை சேமிப்பு, பாதுகாத்தல் மற்றும் பகிர்தல். இந்த சேமிப்பு மற்றும் பாதுகாத்தல் முறைகள் பல அழிந்து விட்ட நிலையில் மண்ணால் செய்யப்பட்ட மிகப் பெரிய குதிர் என்ற பாதுகாப்பு பானையும் விடைப் பெற்றுவருகிறது. அதன் பிரமாண்டத்தை குறிக்க எங்க அப்பா குதிருக்குள் இல்லை என்ற பழமொழி மூலம் அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு வீட்டிலும் விதை பாதுகாப்பு செய்த நம் மக்கள்  இன்று கவலையின்றி விதை உரிமையை விட்டுக் கொடுத்து கம்பெனிவிதைகளால் கலக்கம் அடைந்து வருகின்றனர்.
ஸ்வால்பார்ட் விதை காப்பக முகப்புத் தோற்றம்
இராமநாதபுரம் மாவட்டதில் அளவான குதிர்
எளிமையாகவும் வீட்டிற்கு ஒரு குதிர் என்றிருந்த விதை சேமிப்பு மறைந்து  இன்று கூட்டு முயற்சியில் மிகமிக பிரமாண்டமான அளவில் நார்வேக்கும் வடதுருவத்திற்கும் இடையேயுள்ள  உறை பனிவெளியில் அமைந்துள்ள ஸ்வால்பார்ட் (Svalbard)” என்ற இடத்தில் உலக விதைகள் காப்பகம் நிறுவியுள்ளனர். 94 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு வகையான தாவர விதையினங்கள் இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.  ஏற்கனவே 6 லட்சம் விதைகளுக்கு மேல் சேகரித்து வைத்துள்ளனர். குளிர் சாதன வசதியின்றி சுமார் 25 வருடங்கள் காப்பாற்ற முடியும் என்கிறார்கள். இதன் மறுபெயர் கூட உலகின் இறுதிநாள் விதை காப்பகம் (Doomsday seed Vault). பாரம்பரிய தானியங்கள் பல்வேறு காரணங்களால் அழிந்து வருகின்றன. நிறைய விதை காப்பகங்களை குறிவைத்து தாக்க ஆரம்பித்துள்ள மனிதன் விதை மூலம் அமைதியின்மையை ஏற்படுத்த முடியும் என நம்புகிறான். விளைவு இது போன்ற விதை காப்பகம் தேவையாகிறது. தற்போது வங்கி லாக்கர் போன்று வைத்து எடுத்துக் கொள்ளும் வசதி என்கிறார்கள். வேகமாக அழிந்து வரும் பாரம்பரிய விதைகளை காப்பாற்றி வருவது மனத்திற்கு மகழ்ச்சிதான் என்றாலும் போகப் போகத்தான் தெரியும் இவர்களின் நோக்கமும் செயலும். வீட்டிற்கு ஒரு குதிர் மறைந்து உலகத்திற்கே ஒரு லாக்கர் என்பது புதிர் தான்.

இன்றைய உலகம் புல்பூண்டு இன்றி அழிந்தாலும், அழிக்கப்பட்டாலும் இந்த காப்பகத்திலிருந்து விதைகளைப் பெற்று திரும்ப ஒரு புதிய உலகை படைக்க இயலும் என்று இதனை நிறுவியுள்ள அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. இனி மனிதனை அழிக்க ஆயுதங்கள் தேவையில்லை நீரும் விதையும் போதும் ..அழிவை அவன் தேடிக் கொள்வான்.


புகைப்படம் உதவி : 'குதிர்' யெஸ்.பாலபாரதி

விதை காப்பாளர்கள் (1) 
விதை காப்பாளர்கள் (2) 
விதை காப்பாளர்கள் (3)
விதை காப்பாளர்கள் (4)  

Monday, July 9, 2012

விதை காப்பாளர்கள் – (4)


EarthE Award அங்கீகாரம்
Dr.வந்தனா சிவா சூழலியல், நிலம், நீர், காடுகள், இயற்கை விவசாயம், விதைஉரிமை போன்றவைகளில் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும் போராடி வருகிறார். இதுபோன்ற விஷயங்களில் உலகத்திற்கு இந்தியாவின் முகம் Dr.வந்தனா சிவா அவர்கள் தான் என்றால் மிகையில்லை. 1982ஆம் ஆண்டு தனது முனைவர் பட்டம் பெற்ற இயற்பியல் துறையை விட்டு அறிவியல், தொழில்நுட்ப, சூழலியல் ஆராய்ச்சி அறக்கட்டளையை (RFSTE) Research Foundation for Science, technology and Ecology (India) தொடங்கினார். பின்பு  நவதான்யா என்ற அமைப்பை ஏற்படுத்தி பாரம்பரிய விதைகளை பாதுகாத்து 5,00,000 விவசாயிகளிடம் அதனை ஒரு விழாவாக நடத்தி பாரம்பரிய விதைகளின் மகத்துவத்தை பரப்பி வருகிறார். விதை சேமிப்பை பெண்களிடம் மிக சிறப்பாக கொண்டு சென்றுள்ளார். விதைகளுக்கான பள்ளியை (Bija Vidyapeeth) உத்தரகாந் மாநிலத்தில் நிறுவியுள்ளார். மாற்று நோபல் பரிசு என்று அழைக்கப்படும் "வாழ்வாதார உரிமை விருது" 1993ஆம் ஆண்டு பெற்றவர். 2010 இல் சிட்னி அமைதி பரிசு என்று நிறைய உலக அளவிலான பரிசுகள் பெற்றவர். இந்த ஆண்டு 2012 எர்த்இ (EarthE Award) பரிசுப் பத்திரம் இவருது உருவப் படத்துடன் அளிக்கப்படவுள்ளது இவரது உழைப்பிற்கும், சேவைக்கும் கிடைத்த உலக அங்கீகாரம்.  20 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். உயிரோடு உலாவ”,   “பசுமைப் புரட்சியின் வன்முறை ஆகிய நூல்கள் ஏற்கெனவே தமிழில்  மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பாரம்பரிய விதைகளை மீட்டெடுத்து பாதுகாத்து மக்களிடம் பிரபலமாக்க இவர் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் அனைத்தையும் வாழ்த்தி வரவேற்பதோடு நில்லாமல் இவரது செயல்பாடுகளை நம் விவசாய நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டாலே இவரது பணிக்கு நாம் செய்யும் பேருதவியாகும். மேலும் நவதானியவைப் பற்றி அறிந்து கொள்ள http://www.navdanya.org


ஒரு சிறிய வீடியோ.




விதை காப்பாளர்கள் (1) 
விதை காப்பாளர்கள் (2) 
விதை காப்பாளர்கள் (3)

Thursday, July 5, 2012

விதை காப்பாளர்கள் – (3)

Dr. Debal Deb

வேத காலத்தில் லட்சங்களிலிருந்தாகக் கூறப்படும் நெல் வகைகள் திரு.R.H.ரிச்சாயா (1960களில் ) காலத்தில் 20,000 குறைந்தது. இன்று (2012இல்) 700  பாரம்பரிய அரிசி வகைகளை வைத்திருக்கும் Dr.திபால் திப் 1997 ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் அவைகளை விதைத்து பாதுகாத்து வருகிறார். இவை ஒவ்வொன்றும் கிழக்கு இந்திய பகுதிகளில் வசிக்கும் ஏழை விவசாயிகளிடம் சேகரிக்கப்பட்டவை, சிறப்பான குணங்களை உடையவைகள். வெள்ள சமயங்களில் நீர் தேங்குதல், மற்ற நேரங்களில் நீர் பற்றாக்குறை, உப்பு தன்மையை தாங்கி வளர்பவையாக, நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவையாக, சில வகை மணம் நிறைந்ததாக இருக்கின்றன. ஒரு தனி மனித சாதனை என்று கூறலாம். கம்பெனிகளுக்கு பணிவிடை செய்யாமல் விவசாயிகள் பயன் பெறும் வகையில் அவ்வளவு விதைகளையும் சிறிய இடத்தில் விதைத்து அறுவடை செய்து காப்பாற்றி வருவதோடு அவற்றை விவசாயிகளுக்கு விளக்கிக் கூறி அவர்களை பயிர் செய்ய வைத்து வாழ்கையில் ஒளியேற்றி வருகிறார். இந்திய விவசாய தற்கொலைகள் (2011 - 14,027) அதிகமாக ஒருகாரணம் விவசாயிகளிடம் விதை தற்சார்பு இல்லாமையாகும். இந்த விதை தற்சார்பு பரவாலக்கப்பட்டால் இந்திய விவசாயம் பிழைக்கும். இதனை படிக்கும் அன்பர்கள் விதை தற்சார்பு பற்றி உங்களுக்கு தெரிந்ததை பதிவேற்றினால் மற்றவர்களும் பயன் பெறுவார்கள். Dr.திபால் திப் தலைவராக உள்ள அமைப்பைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள :  http://www.cintdis.org/

ஒரு சிறு வீடீயோ காட்சி



விதை காப்பாளர்கள் (1) 
விதை காப்பாளர்கள் (2)  
விதை காப்பாளர்கள் (4)