Wednesday, December 10, 2014

பாசுமதி இலை


தாவரவியல் பெயர் :  Pandanus amaryllifolius


‘பாசுமதி அரிசி” என்ற விலைமிக்க அரிசியை அதன் மணத்திற்காக விஷேச காலங்களில் ‘புலாவ்”,  பிரியாணி, தேங்காய் பால் சாதம்  போன்ற உணவு வகைகளை  சமைக்கும் போது உபயோகிப்போம். ஆனால் கிழக்காசிய நாடுகளில் பிரபலமாகவுள்ள ஒரு தாவரத்தின் இலை  பாசுமதி அரிசியின் மணத்தை சாதாரண அரிசிக்கு தரும் என்றால் வியப்பளிக்கலாம். தமிழில் "பாசுமதி இலை" என்றழைக்கப்படுறது, ஆனால் இன்னும் பிரபலமாகவில்லை. “பேன்டன்” (Pandan)என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த தாவரத்தின் குடும்பம் மிகப் பெரியது எனவே  Pandanus amaryllifolius என்ற தாவரவியல் பெயர் கொண்ட தாவரம் தான் இந்த பாசுமதி இலை. வெப்பமண்டல தாவரம்,  நிழல் பகுதியில் சிறப்பாக வளர்கிறது. எளிதாக வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம்.

Monday, December 1, 2014

மணத்தக்காளி அல்லது சுக்குட்டிக் கீரை

சில வகை கீரைகள் நல்ல வேர் அமைப்பும் சற்று உறுதியான தண்டையும், விரைவாக வளரும் தன்மையை பெற்றிருப்பதால் மறுதாம்பு பயிர்களாக விரைவில் திரும்ப திரும்ப அறுவடைக்கு வருகின்றன. பராமரிப்பு குறைவதுடன் வளர்ப்பதும் எளிது.



சற்று கசப்புச் சுவையுடன் கூடிய மருத்துவ குணம் நிறைந்த மணத்தக்காளி உணவுபாதையை சீராக்குவதில் பெரும்பங்கு ஆற்றுகிறது. தண்டு, இலை, காய், பழம் என அனைத்து பாகங்களையும் உபயோகிக்கலாம். வாய் புண்ணிற்கும், அல்சர் என்னும் குடல் புண்ணிற்கும் அருமருந்து இந்த மணத்தக்காளி. மலச்சிக்கலை தவிர்க்க தண்டு மற்றும்  இலையை பொறியல் செய்து உண்ண வேண்டும்... வாய்நாற்றம்  உள்ளவர்கள் தினமும் இலையை மென்று வர வாய்நாற்றம் குறையும். குறிப்பாக பாட்டி வைத்தியத்தில் அல்சருக்கு தினமும் காலை உணவாக சிறிய வெங்காயம், பசுவெண்ணையுடன்  மணத்தக்காளிக் கீரையை நன்கு வதக்கி குறைந்த அளவு சாதத்துடன் அதிக அளவு பொறியலை தொடர்ந்து உண்டு வர விரைவில் குணம் பெறலாம். சில தோல் நோய்களுக்கு தொடர்ந்து இலைசாற்றை தடவி வர அவைகள் மறையும். மறுதாம்புப்  பயிர் என்பதால் வீட்டுத் தோட்டத்தில் கண்டிப்பாக வளர்க்க வேண்டிய கீரை,  வணிக ரீதியாகவும் இதனை பயிர் செய்யலாம். விதைகள் மூலம் உற்பத்தி செய்யலாம்.

Tuesday, August 5, 2014

சுவர் தோட்டம் ( Wall Gardening )

பெங்களூரு நகரில் அமைக்கப்பட்டிருந்த செங்குத்துத் தோட்டம்
 சுவர் தோட்டம், பசுமை சுவர், செங்குத்துத் தோட்டம்  என பல்வேறு பெயர்களில் இன்றைய “கான்கீரிட் காடு”களிடையே பசுமையை உண்டாக்க வந்துள்ளது இந்த வகை தோட்டக்கலை. இன்றைய காலகட்டதில் நகரங்களில் இடத்தின் மதிப்பு அதிகமாக அதிகமாக வீட்டுத் தோட்டத்தின் பரப்பு குறைந்து, தாவரங்கள் அழிக்கப்பட்டு, தேவையின் காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகள்  அதிகமாக கட்டப்பட்டு வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்ப அளவு வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தாவரங்களால் மட்டுமே மிக குறைந்த செலவில் வெயிலின் தாக்கத்தைக் குறைத்து காற்றை சுத்தம் செய்ய இயலும். எனவே இந்த வகை தோட்டம் பிரபலமடைந்து வருகிறது. 
பாலிபுரோப்பிலீன் பிளாஸ்டிக்கிலான தாங்கி.
தொட்டிகள் பொருத்தப்பட்ட நிலையில்
  இந்த செங்குத்துத் தோட்டம்  ஏற்கனவே உள்ள சுவர்களிலோ அல்லது அதற்கென தனியாக சட்டங்கள் அமைத்தோ உருவாக்கலாம். உள்புறமோ அல்லது வெளிபகுதியிலோ அமைக்கலாம். பொதுவாக கண்ணாடி அமைப்புகள் கொண்ட அலுவலக, நட்சத்திர ஓட்டல்களின்  முகப்பு அறைகளில் உள்புறமாக பசுமை சுவர்களை உருவாக்குகின்றனர்.  பகல் நேரங்களில் சூரிய வெப்பத்தை கட்டிடங்கள் கிரகித்து சூரிய கதிர் வீச்சை ஏற்படுத்தும். இதனால் அந்தப் பகுதியில் வெப்பம் அதிகரிக்கும் இது போன்ற சுவர் தோட்டம் அமைக்கும் போது சூரிய வெப்பத்தை தாவரங்கள் தடுத்துவிடுவதால். சூரிய கதிர் வீச்சு குறையும். எனவே கட்டிடங்களின் அருகில் வெப்ப அளவு குறைய வாய்ப்பு ஏற்படுகிறது.  உயரமான பகுதிகளில் தண்ணீர் ஊற்றுவது சற்று கடினம் எனவே சொட்டுநீர் பாசனம் செய்தால் எளிமையாக பராமரிக்கலாம். மேலும்  அடுக்குமாடி குடியிருப்புக்களில் இதனை அமைக்கும் போது மேல் தளங்களில் குடியிருப்போரின் சமையலறை கழிவு நீரை சுத்திகரித்து எளிமையாக மறு உபயோகம் செய்ய ஒரு வாய்ப்பு. மேலை நாடுகளில் கட்டிடம் கட்டும் போதே சுவர் தோட்டத்திற்கான அமைப்புகளை ஏற்படுத்தி விடுகின்றனர்

நல்ல வெளிச்சமுள்ள அல்லது சற்று நிழலான சுவர் பகுதி போதுமானது. புற ஊதா கதிர்களை  தாங்கி நீண்ட நாட்கள் வரும் பாலிபுரோப்பிலீன் பிளாஸ்டிக்கிலான சுவற்றில் பொருத்தப்படும் பகுதி, தொட்டிகள், பைகள் கடைகளில் நிறைய வந்துள்ளன. அவைகளை வாங்கி நமது தேவைகேற்ப வடிவமைத்து அலங்கார செடிகள், அல்லது சமையலுக்கு தேவையான செடி வகைகளை வளர்க்கலாம். பொதுவாக அடுக்குமாடி அல்லது வணிக வளாகங்களின் முகப்பு பகுதிகளில் அலங்காரச் செடிகளையும், குடியிருப்பு பகுதிகளின் அருகில் சமையலுக்கு தேவையான செடி வகைகளையும் வளர்க்கலாம். காம்பௌன்ட் சுவற்றையும் இதற்கு பயன்படுத்தலாம். இவைகள் இன்றி பாட்டில்கள், பழைய டயர்கள் போன்றவற்றையும் நமது பொருளாதாரத்திற்கேற்ப பயன்படுத்தலாம்.
எளிமையாக சொட்டு நீர் அமைப்பு
வண்ணமிக்க அழகு தாவரங்கள்
 எடை குறைந்த, நீரை அதிக நாட்கள் தக்க வைத்துக் கொள்ளும் தென்னைநார் கழிவு, மண்புழு உரம் போன்றவற்றை வளர்ப்பதற்கு உபயோகிக்கும் போது சிறப்பாக செடிகள் வளரும். ஆஸ்பரகஸ், பெரணி வகைகள், வண்ணமிகு கெலேடியம் வகை தாவரங்கள், சில வண்ண புற்கள், தொங்கு தொட்டிகளில் வளர்க்கப்படும் அனைத்து மலர் செடிகளையும், புதினா, கொத்தமல்லி, ஓரிகான போன்ற நறுமண தாவரங்களையும் சுவர் தோட்டத்தில் வளர்க்கலாம். இன்றைய நகரங்களின் தேவை இந்த “சுவர் தோட்டம்”

Friday, July 25, 2014

கோவையில் வீட்டுத் தோட்டப் பயிற்சி



 ஆரோக்கியமான இயற்கை உணவின் மேலுள்ள நம்பிக்கை, காய்கறிகளின் விலை கடுமையான உயர்வுக்குப் பின் மக்களின் கவனம் மெதுவாக வீட்டுத் தோட்டத்தின் பக்கம் திரும்பியுள்ளது. கோவையில் நடைபெற்ற “அக்ரி இன்டெக்ஸ்” வந்த திரளான மக்கள்  வீட்டுத் தோட்ட அரங்குகளை வெகுவாக இரசித்துப் பார்வையிட்டது சான்றாகும்.

தமிழக அரசு கோவைக்கும், சென்னைக்கும் சலுகை விலையில் வீட்டுத் தோட்ட உபகரணங்களை கொடுத்துள்ளது. இது மற்ற நகரங்களுக்கும் நிச்சயம்  விரிவாக்கப்படும் என எண்ணுகிறேன். வாங்கியவர்களுக்கும் / வாங்கப் போகிறவர்களுக்கும்  இந்த ஒரு நாள் பயிற்சி உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

1. வீட்டுத் தோட்டம்
2. நீர் மேலாண்மை
3. உர மேலாண்மை
4. பூச்சி / நோய்  மேலாண்மை

இவற்றோடு மூலிகைகள் மற்றும் சிறுதானியங்கள் பற்றிய தகவல் தொகுப்பு.


தொடர்புக்கு :-

அலைபேசி  75985 16303
            94420 19007  
   

Saturday, July 5, 2014

“கொம்புசா” என்னும் ஆரோக்கிய பானம்

சப்பாத்திக் காளான் (SCOBY )
அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், இடபற்றாக் குறையுள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கு காய்கறி வளர்ப்பு  ஒரு கனவு போல் தோன்றும், மனமிருந்தாலும் முடியாத ஒரு நிலை. மாறாக ஒரு சிறிய கோப்பைக்குள் ஒருவகை சப்பாத்தி காளானை SCOBY (Symbiotic Colony Of Bacteria and Yeast) வளர்த்து அதிலிருந்து பெறப்படும் நொதித்த நீரை அனுதினம் பருகி உடல் ஆரோக்கியம் பெறலாம். ஈஸ்ட் மற்றும் பாக்டீரீயா கலந்து நொதித்த பானத்தை “கொம்புசா” என்றழைக்கின்றனர். இந்த கொம்புசா பானத்தை தினமும்  சிறிதளவு அருந்த நீ..ண்..ட… நாட்கள் நோயின்றி மகிழ்ச்சியான வாழ்வு வாழலாம். பலவிதமான நோய்கள் தாக்காமலிருக்கும் என்று ரஷ்யாவில் சைபீரியா பகுதி, மங்கோலியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் நூறு ஆண்டுகளாக்கும் மேலாக  இதனை உபயோகித்து நீண்ட, நோயற்ற மகிழ்ச்சியான வாழ்வு வாழ்ந்ததை பதிவு செய்துள்ளனர். கொம்புசா என்று அழைக்கப்பட்டாலும் “ஈஸ்ட் டீ“, க்ரீன் டீ என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
கண்ணாடிக் கிண்ணம்

டீத்தூள் மற்றம் சர்க்கரை

உணவு காளான் வளர்ப்பில் தனி குடில் அமைப்புக்கள், ஈரப்பதம், பராமரிப்பு, விதைகாளான், வைக்கோல், பிளாஸ்டிக் பைகள், அதிக முதலீடு, வணிகத் தொடர்பு போன்றவற்றால் எல்லோராலும் எளிமையாக வீட்டிற்குள் வளர்க்க முடியாது. இந்த கொம்புசா காளான் வளர்ப்பில் இடம், குடில்,  அதிக கவனம் போன்றவை தேவையில்லை. உற்பத்தி செய்ய தேவையானவை ஒரு பாத்திரம் (கண்ணாடி அல்லது பீங்கான் கோப்பை சிறந்தது) , “டீ” தூள், சர்க்கரை, தேவையான அளவு தண்ணீர் மற்றும் சப்பாத்தி காளான்.
ஆரம்ப நிலையில் ...

சற்று வளர்ந்த நிலையில்

முதலில் நீரை நன்கு கொதிக்க வைத்து டீ தூள் போட்டு வடிநீர் (Decoction) நன்கு இறங்கிய பின்பு சர்க்கரையை கலந்து கொள்ளவேண்டும். நன்கு ஆறவைத்த பின்பு வட்ட வடிவில் இருக்கும் இந்த சப்பாத்தி காளானை) தாய் காளானிலிருந்து பிரித்து கோப்பைக்குள் இடவேண்டும். ஒரு வாரம் சென்ற பின்பு புதிய காளான் அடுக்கு கீழ் பகுதியில் தோன்றியிருக்கும். தினமும் அந்த காளானால் நொதித்த வடிநீரை பருகிவரலாம். சற்று புளிப்பு சுவையுடையது இந்த பானம் வணிக நோக்கிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.

  ஒரு வாரம் சென்ற பின்பு மீண்டும் முன்பு செய்ததைப் போன்று வடிநீர் தயாரித்து  மேல் அடுக்கு  காளானை அகற்றி விட்டு கீழ் பகுதியில் தோன்றிருக்கும் புதிய காளானை உபயோகிக்க வேண்டும். புதிதாக வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆரோக்கியமான முறையில் நாம் செய்கிறோமா என தெரிந்து கொள்ள காளானின் வளர்ச்சி, நிறம் மற்றும் வடிநீரின் மணம் ஆகியவை உணர்த்தும். பொதுவாக பழுப்பு நிறத்தில் காணப்படும் இந்த காளான் நிறம் மாறி கருப்பு, வெள்ளை, பச்சை நிறத்தில் காணப்படும் போது அது கெட்டுவிட்டதாக கொண்டு அதனை அருந்துவதை தவிர்த்து புதிதாக ஆரம்பிக்க வேண்டும்.
புதிய காளான் ஒரு வாரத்தில் கீழ்பகுதியில் தோன்றும்

இரத்த அழுத்தம், மலசிக்கல் நீங்கி நோய் எதிர்ப்பு சக்தி கிடைகிறது. சில தோல் நோய்கள் குணமாகின்றன, சருமத்தின் சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றம் கிடைக்கிறது, புற்று நோயின் தாக்கம் குறைகிறது என்று இதனை அருந்துபவர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டாலும், கொம்புசா பற்றிய அறிவியல் ஆய்வுகள் மிகக் குறைவாக இருப்பதால் அதுபோன்று இல்லை பின் விளைவுகள் உண்டு என கூறுபவர்களும் உண்டு. எனவே இதனை பயன்படுத்துபவர்கள் ஒவ்வாமை தமக்கு ஏற்படுகிறதா? பின் விளைவுகள் தங்களுக்கு ஏற்படுமா ? என ஆய்வு செய்து பின்பு உங்கள் கொம்புசா வளர்ப்பை ஆரம்பியுங்கள். உலகின் பல  நாடுகளில் அனுபவ ரீதியாக இதன் பயனாளிகள் இலட்சக்கணக்கில் நூறு ஆண்டுகளுக்கு  மேலாக  இருந்து வருகிறார்கள்.

Wednesday, June 18, 2014

கற்றாழை என்றழைக்கப்படும் “குமரி”

குமரி அல்லது சோற்றுக் கற்றாழை
வெப்ப மண்டலப் பகுதிகளுக்கு இயற்கை நிறைய அற்புதமான தாவரங்களை தந்துள்ளது. அவற்றில் ஒன்று கற்றாழை எனபடும் “குமரி” அல்லது “சோற்றுக் கற்றாழை”. ஆப்ரிக்காவை தாயகமாகக் கொண்ட காற்றாழையில் நிறைய வகைகள் உண்டு. நம் நாட்டில் பஞ்சம் ஏற்பட்ட போது காற்றாழையின் மடலை சீவி அதனுள் இருக்கும் “ஜெல்” பகுதியை உண்டு உயிர் வாழ்ந்ததாக பழைய நூல்கள் கூறுவதால் அதற்கு “சோற்றுக் கற்றாழை” என்ற பெயர் வந்திருக்கலாம். வெப்பத்தையும் வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய மருத்துவ குணங்கள் மிக்க கற்றாழையை எளிதாக வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம்.

கண் திருஷ்டி , தீய சக்திகள் இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக நகர்புறங்களில் கூட சில கடைகள், வீடுகளுக்கு முன் கட்டித் தொங்க விடப்படுகிறதை இன்றும் நாம் பார்க்கமுடியும். கிராமப்புறங்களில் மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணிகள் பற்றாமலிருப்பதற்காகவும், சிறிய கொசுக்களை ஈர்த்து வைத்துக்கொள்ளவும் தொங்க விடப்படுவது உண்டு. கற்றாழையை மருந்துப் பொருளாகவும் , அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர். இன்று எல்லா கடைகளிலும் ‘அலோவேரா’ ஷாம்பு, சோப்புக்கள், க்ரீம்கள் நவீன பெண்களிடையே மிக பிரபலம். இயற்கை சார்ந்த பொருளிலிருந்து பெற படுவதால் வளர்ந்த நாடுகளிலும் அலோவேரா சார்ந்த பொருட்கள் சிறந்த சந்தை வாய்பை பெற்றுள்ளது.


ஜெல்

வீட்டில் வளர்ப்பதால் சிறு காயங்கள் ஏற்படும் போது இதனை காயங்கள் மேல் தடவ விரைவில் குணம் காணலாம். சிறிய சிறிய சரும நோய்களுக்கு இதனை வெட்டி பூச நிவாரணம் உண்டு. கோடைகாலங்களில் சூரியவெம்மையை (Sunburn) குறைக்க இதன் மடலை வெட்டி முகம், கைகளில் பூசனால் சருமத்தை காத்துக் கொள்ளமுடியும். தலையில் ஏற்படும் பொடுகு போன்ற பிரச்னைகளுக்கு கற்றாழையின் கூழை தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க பலன் கிடைக்கும். இதன் ஜெல்லை நன்கு கழுவி உண்ண தேக பொலிவு உண்டு. நிதம் சாப்பிடக்கூடாது. வியர்வையில் கற்றாழை வாசம் இருக்கும். மலசிக்கல், குடல் புண்களுக்கு பாரம்பரிய வைத்தியர்கள் இதனை பரிந்துரைப்பர்.

கசப்புத்தன்மை மிக்க குறைவாயுள்ள ஒரு வகை

நிறைய வகைகள் இதில் உண்டு. கசப்பு தன்மை அதிகமுள்ளது, பொதுவாக லேசான மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் அதன் சாறு இருக்கும். கற்றாழையின் மணம் அதிகமிருக்கும். இதன் ஜெல்லை நன்கு கழுவி உண்ண வேண்டும். கசப்புத்தன்மை மிக்க குறைவாயுள்ள ஒரு வகையின் சாறு ஒடித்த சிறிது நேரத்தில் சிவப்பு நிறமாக மாறிவிடும். மணமற்றதாக இருக்கும். அதிக மருத்துவ குணமுள்ளது என்கின்றனர்.

ஊடுபயிராக இதனை வளர்க்கலாம்

பக்க கன்றுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். திசு வளர்ப்பு மூலமாகவும் இனபெருக்கம் பெரிய அளவில் செய்கின்றனர். நீர் தேவை குறைவு என்பதாலும் வறட்சியை தாங்கி வளரும் தன்மையுள்ளதால் வீட்டில் வளர்ப்பதோடு வசதியுள்ளவர்கள் விவசாய நிலங்களிலும் வணிக நோக்கில் ஊடுபயிராக இதனை வளர்க்கலாம். வணிக முறையில் அழகு சாதனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் ஒப்பந்த முறையில் பயிர் செய்வது நன்மை தரும்.

Sunday, June 8, 2014

“தோட்டக்கலை சிகிச்சை” (Horticultural Therapy )



தோட்டக்கலை என்பது வெறும் காய்கறிகள் | பழங்கள் | மலர்கள் | அழகுச்செடிகள் உற்பத்தி, பொழுதுபோக்கு, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு, அந்தஸ்து என்ற வழக்கமான நிலைகளைத் தாண்டி வயதானவர்கள், குழந்தைகள், மனநோயாளிகள், மன இறுக்கம், தனிமை, திக்கற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், குறிப்பிட்ட பழக்கங்களுக்கு அடிமையானவர்கள், இழப்பை சந்தித்தவர்கள், வாழ்கை மாற்றத்தை அடைந்தவர்கள், விபத்தில் ஊனமானவர்களுக்கு மிக மிகச்சிறப்பானது இந்த “தோட்டக்கலை சிகிச்சை” (Horticultural Therapy ) முறையாகும்.

இன்றைய அதிவேக வாழ்கை முறை, தவறான உணவுப்பழக்கம், வேலைப்பழு, இரவு வேலை நேரம், நெரிசல் மிக்க நீண்ட பயணம், கடுமையான அலுவலக உழைப்பு போன்றவை  சாதாரணமானவர்களை  அதிக மன உளச்சல் /உடல் சோர்வு | மனஅழுத்ததிற்கு இட்டுச் செல்கிறது. அதற்கு எளிய ஆனால் சிறப்பான தீர்வு “தோட்டக்கலை சிகிச்சை” முறை என்றால் அநேகருக்கு ஆச்சரியம் தரலாம். இன்றைய வாழ்வியல் முறையில் . “நமக்கு நாமே” தீர்வு என்று இரசாயன உற்பத்தியை தவிர்த்து இயற்கை முறையில் தோட்டக்கலையை சிகிச்சையாக செய்ய ஆரம்பித்தால் குடும்ப ஆரோக்கியத்தை காப்பதோடு நோயற்ற மகிழ்ச்சியான குடும்ப வாழ்வை வாழலாம்.

அமெரிக்க சுதந்திர பிரகடனத்தில் கையொப்பம் இட்டவரும், “அமெரிக்காவின் மனநல மருத்துவதின் தந்தை” என்று புகழ் பெற்றவரும், பல்துறை வல்லுனருமான Dr. பெஞ்சமின் ரஷ் என்பவர் 1798 ஆண்டுகளில் மனநலம் குன்றியவர்களுக்கு “தோட்டக்கலை” மூலம் சிகிச்சை தருவதால் அவர்களின் மன நிலையை மேம்படுத்தலாம் என பதிவு செய்தார். பின்பு 1800 களில் ஸ்பெய்ன் நாட்டில் மனநல மருத்துவமனைகளில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. உலகப் போருக்குப் பின் வயதான, ஊனமுற்ற போர்வீரர்களுக்கு தோட்டக்கலை சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று வளர்ந்த நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முறையாக “தோட்டக்கலை சிகிச்சை” உருவெடுத்துள்ளது. தொழில் முறையில் தோட்டக்கலை மூலம் சிகிச்சை மருத்துவ மனைகள், காப்பகங்கள், வயதானவர்கள் தங்கும் விடுதிகளில் நடைபெறுகிறது.

இதனால் பெறப்படும் நன்மைகள்.

வயதானவர்களுக்கு உடல் ரீதியாக  வலிமை, ஆற்றல், சுறுசுறுப்பான நடமாட்டம்,  நல்ல கண்-கை தொடர்பு (hand-eye coordination) ஆகியவற்றில் முன்னேற்றம் காணலாம். மன அழுத்தத்தை குறைத்து மன வலிமையையும், நம்பிக்கையையும் தரும்.

பார்த்தல், தொடுதல், நுகர்தல், சுவைத்தல் மூலம் குழந்தைகள் | மனநலம் குன்றியவர்களின் இயற்கை புரிதலை மேம்படுத்தும். கவனம், மனதை ஒரு முகப்படுத்துதல், முன்னேற்றம், புதிய நுட்பத்தை மனம் நாடுதல், நல்ல திட்டமிடுதல், பிரச்சனைகளுக்கு தீர்வு, ஞாபக சக்தியை அதிகரித்து நல்ல மனப்பான்மையையும் குழந்தைகளிடம் ஏற்படுத்தித் தரும்.
சமூக ரீதியாக மக்களிடையே நல்ல தொடர்பு கிட்டும், நமது கூட்டுக் குடும்ப முறையில் சுமுகமான உறவு பலப்படும்.
புதிய நுட்பம்

தோட்டக்கலை என்பது தாவரங்கள் மட்டுமின்றி நீரின் முக்கியத்துவம், நீர் மேலாண்மை, பறவைகள், மிருகங்கள், பூச்சியினம், பட்டாம் பூச்சி, நோய் மற்றும் அதன் நிர்வாகம், உர மேலாண்மை என பல உட்பிரிவுகளைக் கொண்டது. எனவே பல்வேறு துறைகளில் நமது கவனம் திருப்பப் படுவதால் நிறைய துறைகளில் அனுபவம் கிடைக்கிறது.


பல ஆயிரம் வருடங்களாக இருந்த வந்த “பாட்டி வைத்தியம்” கூட இந்த “தோட்டக்கலை சிகிச்சையின் ஒரு அங்கம் எனலாம். சென்ற 30 வருடங்களில் ஏற்பட்ட மருத்துவ மாற்றம் இந்த பரம்பரை ஞானத்தை இளம் தலைமுறையினரிடம் குறைத்துவிட்டது, பல மருத்துவ தாவரங்கள் அழிந்து வருகின்றன அவைகளை மீட்டெடுத்து பின்விளைவுகளற்ற வைத்தியமும், ஞானமும், மருத்துவ தாவரங்களும் காப்பாற்றப்பட்டு அடுத்த தலைமுறைக்கு வேண்டுமானால் தோட்டக்கலை அவசியம் தேவை.


Saturday, April 26, 2014

நெற்பவளம் என்னும் யோபுவின் கண்ணீர்


நெற்பவளச் செடி

ஜெபமாலையும் இயற்கையான துவாரமும்
நெற்பவளம்
பண்டைய உலகத்தில் இயற்கை சார்ந்த பொருட்கள் அணிகலன்களாகவும் ஆபரணங்களாகவும்  பயன்படுத்தபட்டுள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நெற்பவளம் என்னும் தானியம் உணவாகவும் ஆபரணமாகவும் பயன்படுத்தபட்டுள்ளது நாகரீகம் வளர ஆபரணங்கள் உலோகத்திற்கு மாறிய பின் “தங்கம்” இன்று அரசாட்சி செய்கிறது. தங்கத்தின் விலையும் உயர உயர நெற்பவளம்  மீண்டும் புத்துயிர் பெற ஆரம்பித்துள்ளது. ஆன்மீகத்தில் இதன் பங்கு கணிசமாகவுள்ளது. இதன் ஆங்கிலப் பெயரான "யோபுவின் கண்ணீர்"  (Job’s Tear ) என்பது கூட பைபிளில் யோபு என்ற செல்வந்தர் இறைபக்தியின் காரணமாக எல்லாவற்றையும் இழந்தபின் கூட பக்தியுடன் இருந்ததால் அவர் அதிகம் கண்ணீர் விட வேண்டியிருந்தது. அவரை கனப்படுத்தும் முகமாக “யோபுவின் கண்ணீர்” என்றழைக்கின்றனர்.  இன்றும் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் ஜெபமாலையாக நெற்பவளத்தையே உபயோகிக்கின்றனர். காலபோக்கில் நெற்பவளம் கிடைப்பது அரிதானதால் பிளாஸ்டிக் மணிகள் அந்த இடத்தை நிரப்பியுள்ளது.

பலவித ஆபரணங்கள்

“அன்னை தெரசா” அவர்கள் நெற்பவிள ஜெபமாலையுடன்.

நெற்பவிள காதணீ.


புல் வகை குடும்பத்தை சார்ந்த இப்பயிர் வெப்பமண்டலத்தைச் சார்ந்த கிழக்காசிய நாடுகளை தாயகமாகமாகக் கொண்டது. ஆண்டுப் பயிரான இதற்கு குறைந்த பட்ச நீர் போதுமானது. நன்கு நீர் கிடைக்கும் இடங்களில் 6 அடி உயரம் வளர்ந்து நிறைய மணிகளைத் தரும் .வடமாநிலங்களில் “வைஜயந்தி” என்று அழைக்கின்றனர். மருத்துவ குணம் கொண்ட இதனை தானியமாகவும் உட்கொள்ளலாம் அதை சமயம் கடினமான, பளபளக்கும், நடுவில் துவாரமுள்ள இம்மணியை கோர்த்து ஆபரணமாக அணிய உடல் ஆரோக்கியம் பெறும். மாலையாகவும் வளையல், காதணி என்று பல்வேறு அணிகலன்கள் செய்யப்படுகின்றன. “அன்னை தெரசா”அவர்கள் நெற்பவளத்தால் செய்யப்பட்ட ஜெபமாலையை உபயோகித்தார்கள் என்பது கூடுதல் தகவல். இந்து சமயத்திலும் இதனை மாலையாக அணிகிறார்கள். பௌத்த, முஸ்லிம் சமயங்களிலும் இதற்கு சிறப்பான இடமுண்டு. பெண்கள் சுய உதவிக்குழுகள் வீட்டுத்தோட்டதில் வளர்த்து வியாபார ரீதியாக இதனை ஏற்றுமதி கூட செய்ய வாய்புள்ளது.


Sunday, March 30, 2014

குடும்ப மகிழ்ச்சி


சிறுகுடும்ப தபால் வில்லைகள்

குடும்ப மகிழ்ச்சியென்பது நாம் உண்ணும் உணவில்தான்  உள்ளது. குறிப்பாக இயற்கை இடுபொருட்கள் மூலம் உற்பத்தி செய்யும் உணவுக் பொருட்கள் சுவை தருவதோடு நல்ல ஆரோக்கியத்தையும் தருகிறது என்றால் மிகையில்லை. அறுபது மற்றும் எழுபதுகளில் எல்லா ஊடகங்களிலும் சிறுகுடும்பம், குடும்பக் கட்டுப்பாடுகள் பற்றி அதிக அளவில் விளம்பரங்கள், சாதனங்கள் பற்றிய அறிமுகங்கள் இருந்தன. சிறு குடும்ப தபால் தலைகள் 70-90 களில் வெளிவந்தன. அப்போது இந்திய தம்பதிகளிடையே கருத்தரிக்கும் திறன் நன்கு இருந்ததுஆனால் 2000 ஆம் ஆண்டுகளில் நிலைமை மாறி கருத்தரிப்பு நிலையங்கள் சிறு நகரங்களில் கூட தோன்ற ஆரம்பித்தன.


 இன்று  குழந்தை தத்தெடுத்தல் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். பிறக்கின்ற குழந்தைகளில் குறிப்பிட்ட சதவீதம் ஆட்டிசம் (autism), கற்றல் குறைபாடு (Learning Disability), மனவளர்ச்சி குன்றுதல்  போன்றவை குடும்ப மகிழ்ச்சியை வெகுவாக பாதித்துள்ளது. 60  களில் அறிமுகப்படுத்தப்பட்ட இரசாயன விவசாயம், மாசடைந்த நிலத்தடி நீர்,  உணவு முறையில் மாற்றம் காரணமென்று பெரும்பான்மை மக்கள் கருதுகின்றனர். பாரம்பரிய தானியங்கள், உள்ளூர் இரக விதைகள், வீட்டுத் தோட்டம், விலை சற்று அதிகமிருந்தாலும் இயற்கை அங்காடிகளுக்கு ஆதரவு, யோகப் பயிற்சி போன்ற செயல்கள்  முக்கிய குடும்ப மகிழ்ச்சியை (குழந்தை பேறு) தரும்.

பெரியவர்களுக்கு நோயற்ற ஆரோக்கிய நிலைமையைத் தரும். பெரியவர்கள் ஆரோக்கியமாக இருந்தாலே மருத்துவமனை செல்லுதல் குறைவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.  இதனால் சில சமூக அவலங்கள் (மறுமணம், ஏச்சுப்பேச்சுக்கள், முதியோர் இல்லம், மனநல காப்பகங்கள் ) குறைய வாய்ப்புள்ளது.

Wednesday, January 15, 2014

கோவையில் “வீட்டிலும் செய்யலாம் விவசாயம்”- பயிற்சிக் கருத்தரங்கு.



 முன்பதிவிற்கு :

 தொலைபேசி அல்லது செல்போன் மூலம் 044-66802977 என்ற எண்ணை அழைத்து, குரல் வழிகாட்டுதல்படி பதிவு செய்யவும்.மேலும் விபரங்களுக்கு 99406-51071 (காலை 10 மணி முதல் 6 மணி வரை)